புயல் தாக்கி 1 மாதம் ஆகியும் மின்வினியோகம் சீராகவில்லை: தண்ணீர் இன்றி வயல்களில் வெடிப்பு; கருகும் நெற்பயிர்கள்

புயல் தாக்கி 1 மாதம் ஆகியும் மின்வினியோகம் சீராகாததால் தண்ணீர் இன்றி வயல்களில் வெடிப்பு ஏற்பட்டு நெற்பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
புயல் தாக்கி 1 மாதம் ஆகியும் மின்வினியோகம் சீராகவில்லை: தண்ணீர் இன்றி வயல்களில் வெடிப்பு; கருகும் நெற்பயிர்கள்
Published on

தஞ்சாவூர்,

காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு கடந்த ஜூலை மாதம் 19-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்ததை தொடர்ந்து 22-ந் தேதி அங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. 6 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் வந்ததால் தஞ்சை மாவட்டத்தில் ஒரு போக சாகுபடியாக சம்பா, தாளடி சாகுபடிகளை விவசாயிகள் ஆர்வத்துடன் செய்தனர். தஞ்சை, ஒரத்தநாடு பகுதிகளில் பல இடங்களில் ஆழ்குழாய் கிணறு மூலம் சம்பா, தாளடி சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆண்டு நல்ல மகசூல் பெற முடியும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.

ஆனால் இவர்களது மகிழ்ச்சி நீடிக்கவில்லை. காரணம் கடந்த மாதம் 16-ந் தேதி தாக்கிய கஜா புயலால் தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வீடுகள் சேதம் அடைந்தும், லட்சக்கணக்கான மரங்களும் சாய்ந்தன. வீதிகள், வயல்களில் நடப்பட்ட மின்கம்பங்களும் சாய்ந்தன. தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம், திருச்சிற்றம்பலம், ஒரத்தநாடு, திருவோணம் ஆகிய பகுதிகளில் சாய்ந்த தென்னை மரங்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

சாய்ந்த மின்கம்பங்களை அப்புறப்படுத்திவிட்டு புதிய மின்கம்பங்கள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. வீதிகளில் சாய்ந்த மின்கம்பங்கள் சரி செய்யப்பட்டு, ஏராளமான வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு வந்தாலும் வயல்களில் சாய்ந்த மின்கம்பங்களை சரி செய்யும் பணி இன்னும் துரிதப்படுத்தப்படவில்லை.

கஜா புயல் தாக்கி 1 மாதம் ஆன நிலையில் கூட தஞ்சையை அடுத்த சூரக்கோட்டை பகுதியில் மின்வினியோகம் சீராகவில்லை. இதனால் ஆழ்குழாய் கிணறு மூலம் சாகுபடி செய்யப்பட்ட சம்பா, தாளடி நெற்பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. தண்ணீர் இன்றி வயல்கள் காய்ந்து வெடிப்பு ஏற்பட்டுள்ளதால் நெற்பயிர்கள் கருகுகின்றன. இதை பார்த்து விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வயல்களில் சாய்ந்த மின்கம்பங்களை சீரமைக்க காலதாமதம் ஆகும் என்பதால் நெற் பயிர்களை காப்பாற்ற முடியுமா? என்ற கேள்விக்குறி விவசாயிகள் மனதில் எழுந்துள்ளது.

தண்ணீர் இல்லாத காரணத்தினால் கடந்த 6 ஆண்டுகளாக சாகுபடி செய்யப்படாமல் வயல்கள் எல்லாம் பாலைவனம் போல் காட்சி அளித்தது. ஆனால் இன்றைக்கு மேட்டூர் அணையில் 100 அடிக்கு தண்ணீர் இருந்தும் நெற்பயிர்கள் கருகுவதை விவசாயிகளால் தாங்கி கொள்ள முடியவில்லை. உடனடியாக வயல்களில் சாய்ந்து கிடக்கும் மின்கம்பங்களை சீரமைத்து மின்வினியோகம் செய்தால் தான் நெற்பயிர்களை காக்க முடியும்.

இல்லையென்றால் இந்த ஆண்டும் மகசூல் பாதிப்பு ஏற்படும். அதேபோல கல்லணைக்கால்வாயில் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவும் அவ்வப்போது குறைவதும், அதிகரிப்பதுமாக இருப்பதால் மேடான பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்களுக்கும் தண்ணீர் கிடைக்காமல் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து விவசாயிகள் சிலர் கூறும்போது, புயல் பாதித்து 30 நாட்கள் ஆகியும் மின்வினியோகம் இல்லாததால் நெற்பயிர்களுக்கு ஆழ்குழாய் கிணறு மூலம் தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. இதனால் வயல்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளை நேரில் சந்தித்து தகவல் தெரிவித்தும் முறையாக பதில் அளிக்காமல் அலைக்கழிக்கின்றனர். எனவே உடனே மின்வினியோகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com