ரேஷன் கடைகளில் முறைகேட்டில் ஈடுபட்ட விற்பனையாளர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் - கலெக்டர் உத்தரவு

ரேஷன் கடைகளில் முறைகேட்டில் ஈடுபட்ட விற்பனையாளர்கள் 3 பேரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் ராமன் உத்தரவிட்டுள்ளார்.
ரேஷன் கடைகளில் முறைகேட்டில் ஈடுபட்ட விற்பனையாளர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் - கலெக்டர் உத்தரவு
Published on

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பாயிண்ட் ஆப் சேல் கருவி மூலம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, மண் எண்ணெய் உள்பட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்குவதில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க கலெக்டர் ராமன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயகுமார் ஆகியோர் திடீர் ஆய்வு நடத்தி, முறைகேட்டில் ஈடுபடும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன்படி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக் குமார் மற்றும் அலுவலர்கள் கடந்த 10-ந் தேதி காட்பாடி கோரந்தாங்கல் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு விற்பனையாளராக பணிபுரிந்த கருணாகரன், பாயிண்ட் ஆப் சேல் கருவி இல்லாமல் ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை போன்றவை வழங்கியது தெரியவந்தது. விசாரணையில், அவர் பாயிண்ட் ஆப் சேல் கருவியை தவறவிட்டதும், அதனை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்கி வந்ததும் தெரியவந்தது.

தொடர்ந்து அதே நாளில் அதிகாரிகள் நாட்டறம்பள்ளியை அடுத்த பந்தாரப்பள்ளியில் உள்ள ரேஷன் கடையில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு விற்பனையாளராக பணிபுரிந்த அருள், நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக அரிசி வழங்கியது தெரியவந்தது.

இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் காட்பாடியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு பண்டக சாலை 2-வது ரேஷன் கடையில் ஆய்வு செய்தனர். அங்கு ரூ.31 ஆயிரம் மதிப்பிலான பொருட்களின் இருப்பு குறைவாக இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து விற்பனையாளர் ராஜலட்சுமியிடம் விசாரித்தபோது, சரியான தகவல் தெரிவிக்கவில்லை.

தொடர்ந்து அதே நாளில் அதிகாரிகள் பேரணாம்பட்டை அடுத்த ஓலக்காசியில் உள்ள ரேஷன் கடையில் ஆய்வு செய்தனர். அங்கு பொருட்கள் இருப்பு இல்லாமல் இருந்தது. விசாரணையில், பொருட்கள் இருப்பு இல்லாதது குறித்து விற்பனையாளர் ராஜன்பாபு, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காதது தெரிய வந்தது. இதுதொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை கலெக்டருக்கு அனுப்பி வைத்தனர்.

அதன்பேரில் ரேஷன் கடையில் முறைகேட்டில் ஈடுபட்ட விற்பனையாளர்கள் கருணாகரன், அருள், ராஜலட்சுமி ஆகிய 3 பேரையும் கலெக்டர் ராமன் நேற்று பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் ஓலக்காசி ரேஷன் கடை விற்பனையாளர் ராஜன்பாபுவை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக வழங்கல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com