

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து மேயர், துணை மேயர் தேர்வு செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் காலையில் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களுக்கான தலைவர்களும், மாலையில் 6 நிலைக்குழுக்களுக்கான மொத்தம் 36 உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர். தாடர்ந்து நேற்று காலையில் பணி நியமனக்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடந்தது. இதில் காங்கிரசை சேர்ந்த 34-வது வார்டு கவுன்சிலர் சந்திரபோஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர் மதியம் நிலைக்குழு தலைவர்களுக்கான தேர்தல் நடந்தது. இதில் கணக்கு குழு தலைவராக தி.மு.க.வை சேர்ந்த 3-வது வார்டு கவுன்சிலர் ஆர்.ரெங்கசாமி, பொது சுகாதாரக்குழு தலைவராக தி.மு.க.வை சேர்ந்த 39-வது வார்டு கவுன்சிலர் எஸ்.சுரேஷ்குமார், கல்விக்குழு தலைவராக தி.மு.க.வை சேர்ந்த 30-வது வார்டு கவுன்சிலர் ஆர்.அதிஷ்டமணி, வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவராக தி.மு.க.வை சேர்ந்த 31-வது வார்டு கவுன்சிலர் எஸ்.பி.கனகராஜ், நகரமைப்பு குழு தலைவராக தி.மு.க.வை சேர்ந்த 45-வது வார்டு கவுன்சிலர் பி.பி.ராமகிருஷ்ணன், பணிகள் குழு தலைவராக சுயேச்சையாக வெற்றி பெற்ற 14-வது வார்டு கவுன்சிலர் ம.முருகேசன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்றவர்கள் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.