8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் சேலம் அருகே நடந்த விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு

8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டம் நடத்த விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் சேலம் அருகே நடந்த விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
Published on

பனமரத்துப்பட்டி,

சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமைச்சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.இந்த திட்டத்தால் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும், எனவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் பாதிக்கப்படும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த திட்டத்தை கைவிடக்கோரி பாதிக்கப்படுபவர்கள் மற்றும் விவசாய சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். விவசாயிகள் சிலர் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டனர்.

இதற்கிடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த திட்டத்திற்காக கையகப்படுத்தப்படும் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு, அந்த நிலங்களில் எல்லை கற்கள் நடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதைத்தொடர்ந்து 8 வழிச்சாலை அமைக்கும் பணிக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.

இந்த நிலையில் 8 வழிச்சாலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களை சர்வே எண்ணுடன் பட்டியலிட்டு கடந்த வாரம் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து மீண்டும் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்தனர். அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு போலீசாரின் தடையை மீறி விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்த நிலையில் 8 வழிச்சாலைக்காக கூடுதலாக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதாக தற்போது தகவல் பரவியது.

இதையடுத்து, 8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நேற்று சேலம் அருகே உள்ள நிலவாரப்பட்டி பகுதியில் நடந்தது. இந்த கூட்டத்தில், வருகிற 14-ந்தேதி விவசாயிகள் கலெக்டர் ரோகிணியை சந்தித்து இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுப்பது என்றும், அடுத்த கட்டமாக விவசாய நிலங்களில் மீண்டும் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்தனர். முன்னதாக நேற்று கூட்டம் நடத்த போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com