பிடியாணை பிறப்பித்து தலைமறைவாக இருந்த 99 பேர் ஜனவரியில் கைது: தூத்துக்குடி எஸ்.பி. தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 17 குற்றவாளிகள் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
பிடியாணை பிறப்பித்து தலைமறைவாக இருந்த 99 பேர் ஜனவரியில் கைது: தூத்துக்குடி எஸ்.பி. தகவல்
Published on

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள், சரித்திர பதிவேடு குற்றவாளிகள், நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்து வரும் குற்றவாளிகள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க அனைத்து உட்கோட்ட டி.எஸ்.பி.க்களுக்கு மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவிட்டார்.

அதன்படி அனைத்து உட்கோட்ட போலீசாரும் தீவிர ரோந்து பணி மற்றும் வாகன தணிக்கை மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டு ஜனவரி மாதத்தில் மட்டும் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் ஆகிய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு விசாரணைக்கு ஆஜராகமல் தலைமறைவாக இருந்து வந்த 99 பேர் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 17 குற்றவாளிகள் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழும், 20 குற்றவாளிகள் மீது பிணைப்பத்திரம் பெறப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com