

சேலம்,
ஆய்வுக் கூட்டம்
சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு குறித்து சேலம் சரகத்துக்குட்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டம் நேற்று மாலை சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமை தாங்கி போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆபரேஷன் கஞ்சா வேட்டை-2.0 என்ற திட்டத்தின்படி கஞ்சா விற்பனை செய்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். சட்டம்-ஒழுங்கை சிறப்பான முறையில் செயல்படுத்த ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குட்கா போன்ற போதை பொருட்களை அறவே ஒழிப்பதுடன், அந்த பழக்கத்திற்கு ஆளான மாணவர்களை உரிய ஆலோசகரிடம் அனுப்பி அவர்களை அதில் இருந்து மீட்க வேண்டும். பொதுமக்களை அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வாட்ஸ்-அப் மூலம் ஒன்றிணைத்து தகவல்களை சேகரிக்க வேண்டும்.
விழிப்புணர்வு
சாலை விபத்துகளை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதுடன் சாலை பாதுகாப்பு மற்றும் விதிமுறைகளை கடைபிடிக்க பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும். சமூக வலைதளங்களை கண்காணிப்பது மற்றும் சைபர் குற்றங்கள் குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
போலீசாரின் குறைகளை அவ்வப்போது கேட்டறிந்து உடனுக்குடன் நிவர்த்தி செய்வதுடன் அவர்களுக்கு சுழற்சி முறையில் வாராந்திர ஓய்வு வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து சேலம் சரகத்தில் பல்வேறு குற்றவழக்கு விசாரணையில் சிறப்பாக செயல்பட்டு, குற்றவாளிகளை கைது செய்ததுடன் பொருட்களை மீட்ட போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்.
ஆய்வுக்கூட்டத்தில் போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா, சேலம் சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபினபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஸ்ரீ அபினவ் (சேலம்), சரோஜ்குமார் தாக்கூர் (கிருஷ்ணகிரி), கலைச்செல்வன் (தர்மபுரி), சாய்சரன் தேஜஸ்வி (நாமக்கல்), சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் மோகன்ராஜ், மாடசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூடுதல் சோதனைச்சாவடிகள்
முன்னதாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறும் போது, குட்கா, கஞ்சா கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக மாநில எல்லைகளில் கூடுதல் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். இதேபோல் சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபட்டு வருபவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர் என்றார்.