கோடைவிடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு மாணவ, மாணவிகள் உற்சாகம்

நாமக்கல் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையொட்டி மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிகளுக்கு சென்றனர்.
கோடைவிடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு மாணவ, மாணவிகள் உற்சாகம்
Published on

நாமக்கல்,

பள்ளிக்கல்வித்துறை உத்தரவின்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் என அனைத்து வகையான அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளும் நேற்று கோடை விடுமுறைக்கு பிறகு திறக்கப்பட்டன.

இதையொட்டி மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு புறப்பட்டு செல்வதை காண முடிந்தது. தமிழக அரசின் உத்தரவுபடி பள்ளி திறந்த முதல் நாளான நேற்றே மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகம், சீருடை போன்றவை வழங்கப்பட்டன. பெரும்பாலான பள்ளிகளில் இறைவணக்கம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

உறுதிமொழி ஏற்பு

நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை சரஸ்வதி தலைமையில் நடந்த இறை வணக்கம் நிகழ்ச்சியில் மாணவிகள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். பின்னர் நன்னடத்தை உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர். நேற்று முதல்நாள் என்பதால் பள்ளிக்கு புறப்பட்ட மாணவ, மாணவிகள் முன்னதாக கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்து விட்டு சென்றனர். இதனால் கோவில்களிலும் பள்ளி மாணவ, மாணவிகள் கூட்டம் அலைமோதியது.

நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் பெரும்பாலான தனியார் பள்ளிகளும் நேற்று திறக்கப்பட்டன. ஒருசில தனியார் பள்ளிகள் மட்டும் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பூங்கொத்து கொடுத்து வரவேற்பு

ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளிலும் கோடை விடுமுறைக்கு பின்பு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையொட்டி ராசிபுரம் டவுன் பாரதிதாசன் சாலையில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியும் திறக்கப்பட்டது. பள்ளியில் மாணவர்களுக்கு புத்தகம், நோட்டு, பென்சில், காலணிகள், சீருடை வழங்கப்பட்டது.

மேலும் பள்ளிக்கு வந்த மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியை பாரதி தலைமையில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பள்ளியின் நுழைவு வாசலில் நின்று பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com