

மும்பை,
குர்லா 166வது வார்டில் வெற்றி பெற்ற நவநிர்மாண் சேனா வேட்பாளர் மற்றும் தொண்டர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மும்பை மாநகராட்சி தேர்தலில் 166வது வார்டில் நவநிர்மாண் சேனா வேட்பாளர் சஞ்சய் துர்டே வெற்றி பெற்றார். இதை அவரது ஆதரவாளர்கள் மற்றும் அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர். சஞ்சய் துர்டே இரவு வார்டில் கட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த வார்டில் தோல்வியை தழுவிய ஒரு வேட்பாளர், அவரது ஆதரவாளர்கள் 25 பேருடன் ஊர்வலத்தின் புகுந்து சஞ்சய் துர்டேவையும், நவநிர்மாண் சேனா தொண்டர்களையும் கொலை வெறியுடன் தாக்கினார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
எதிர்பாராத இந்த தாக்குதலில் வேட்பாளர் சஞ்சய் துர்டே மற்றும் நவநிர்மாண் சேனா தொண்டர்கள் என மொத்தம் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
அக்கம்பக்கத்தின் ஓடி வந்து அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பைல்பஜாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். டாக்டர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் வினோபா பாவே நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் இதுபற்றி வேட்பாளர் சஞ்சய் துர்டே புகார் கொடுத்தார். அவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் 25 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்படைய சுதிர், கிரண், ஹேமந்த், கஜானன், கணேஷ், வைபவ், சுனில் ஆகிய 7 பேரை கைது செய்தனர். பின்னர் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 4 நாள் போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டனர்.