நியூட்ரினோ, முல்லைப்பெரியாறு அணை பிரச்சினைக்காக கலெக்டர் அலுவலகம் முன்பு த.மா.கா.வினர் ஆர்ப்பாட்டம்

நியூட்ரினோ ஆய்வு திட்டம், முல்லைப்பெரியாறு அணை உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாய அணியை சேர்ந்தவர்கள் காதில் பூ சுற்றி ஊர்வலமாக வந்து தேனி கலெக்டர் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நியூட்ரினோ, முல்லைப்பெரியாறு அணை பிரச்சினைக்காக கலெக்டர் அலுவலகம் முன்பு த.மா.கா.வினர் ஆர்ப்பாட்டம்
Published on

தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் தலைமை தாங்கி மனுக்களை வாங்கினார். கூட்டத்தில், கொடுவிலார்பட்டியை சேர்ந்த சந்திரசேகரன் மனைவி சாந்தி என்பவர் பாம்பு கடித்து உயிர் இழந்ததால், அவருடைய குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து அறிவிக்கப்பட்ட ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மனுக்கள் அளித்தனர். மனுக்கள் மீது துரித விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

குறை தீர்க்கும் கூட்டம் நடந்து கொண்டு இருந்த போது மதுரை சாலையில் இருந்து கலெக்டர் அலுவலக வளாகம் நோக்கி தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாய அணியை சேர்ந்தவர்கள் ஊர்வலமாக வந்தனர். அவர்களில் பலர் காதில் பூ சுற்றிய படி வந்தனர். சிலர் கையில் காய்ந்து போன பருத்தி செடிகளை வைத்து இருந்தனர்.

முல்லைப்பெரியாறு அணை, காவிரி பிரச்சினைகள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக வந்து கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஊர்வலத்துக்கு விவசாய அணி மாநில தலைவர் புலியூர் ஏ.நாகராஜன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மாவட்ட கலெக்டரிடம் அவர்கள் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தேவாரம் அருகே நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும். அந்த திட்டத்தால் சுற்றுச்சூழல், விலங்குகள், விவசாயம் மிகவும் பாதிக்கப்படும். தேனி மாவட்டமே பாலைவனமாகும். முல்லைப்பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமைகளை எக்காரணத்தை கொண்டும் தமிழக அரசு விட்டுக் கொடுக்கக்கூடாது. நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும். போடி பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது. 18-ம் கால்வாய் நீட்டிப்பு திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும். மதுரை-போடி அகல ரெயில்பாதை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். போடி பகுதியில் தரமற்ற விதையால் பருத்தி பயிர் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. அதற்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வீதம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும். மாவட்டம் முழுவதும் அனைத்து கண்மாய்கள், குளங்களை தூர்வார வேண்டும். மத்திய, மாநில அரசுகள் விவசாய கடனை முற்றிலும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நூதன ஊர்வலம், ஆர்ப்பாட்டம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேபோல், போடி அருகே சிலமலை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலர் மாவட்ட கலெக்டரை சந்தித்து தங்கள் பகுதியில் மணல் அள்ளுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து முறையிட்டனர். அவர்கள் கூறுகையில், போடி மலையடிவார பகுதிகளில் பலர் மணல் அள்ளி வருகின்றனர். அனுமதி பெற்றும், அனுமதி பெறாமலும் மணல் குவாரிகள் செயல்படுகின்றன. அங்கு மணல் அள்ளி பல பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு உள்ளது. சிலமலை, சூலப்புரம் போன்ற கிராமங்களுக்கு ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே மணல் அள்ளுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com