கேபிள் டி.வி., சொத்து வரி, மின் கட்டண நிலுவைத் தொகையை வசூலிக்க வேண்டும் கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்

கலால்துறை மூலம் மதுபான உரிமங்களை ஏலம் விடுவது தற்போதைய நிதி வருவாய்க்கு தேவையாக உள்ளது. கேபிள் டிவி, சொத்து வரி, மின் கட்டணம் ஆகியவற்றின் நிலுவைத்தொகையை வசூலிக்க வேண்டும் என கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தி உள்ளார்.
கேபிள் டி.வி., சொத்து வரி, மின் கட்டண நிலுவைத் தொகையை வசூலிக்க வேண்டும் கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி கவர்னராக கிரண்பெடி பதவியேற்று 4 ஆண்டுகள் முடிவடைந்தது. நேற்று 5-ம் ஆண்டு தொடங்கியது. இதையொட்டி கவர்னர் கிரண்பெடி பொதுமக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி கவர்னராக 4 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளேன். ஒவ்வொரு நாளும் மக்களின் நல்வாழ்வை உறுதி செய்யும் உயர்ந்த நோக்கத்தை கொண்டிருந்தேன். சவால்கள் எதுவும் எங்கள் கவர்னர் மாளிகை அணியை தடுக்கவில்லை. இதற்கு கடந்த 4 ஆண்டுகளின் வரலாறே சாட்சி. இக்காலத்தில் ராஜ் நிவாஸ் மக்கள் நிவாஸ் ஆனது. வார இறுதி நாட்கள் ஆய்வுகளை மறந்து விடக்கூடாது. கொரோனா இதையெல்லாம் மாற்றியுள்ளது. இதே முறையில் எதிர்காலத்தில் மீண்டும் செயல்படாமல் போக வாய்ப்புண்டு.

தற்போதைய பட்டியலில் நிதி மீள் உருவாக்கம் செய்வதே முதல் இடத்தில் உள்ளது. அரசுக்கு வரவேண்டிய சொந்த வருவாய்களை மறுக்கும் தற்போதைய கொள்கையை மறுபரிசீலனை செய்வது அவசியம்.

கலால்துறை மூலம் மதுபான உரிமங்களை ஏலம் விடுவது, தற்போதைய நிதி வருவாய்க்கு தேவையாக உள்ளது. கேபிள் டிவி, சொத்து வரி, மின் நிலுவைத்தொகை ஆகியவற்றின் நிலுவைத்தொகையை வசூலிக்க வேண்டும். பல ஆண்டுகளாக கவனிக்கப்படாமல் உள்ள அரசு இட வாடகை, உரிம கட்டணங்களை மறு சீரமைப்பதில் பரிசீலனை அவசியம் தேவை. சுற்றுலா வருவாய் இழப்பு உள்ளதால் தற்போதைய கையிலுள்ள சொத்துகளின் வருவாயை அதிகரிக்க வேண்டும்.

பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்பான விஜயன் கமிட்டி அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். இதில் இன்னும் பலவற்றை சேர்க்க முடியும். இருந்தாலும் இவை உடனடி நடவடிக்கையில் உள்ளவை. தற்போதைய சூழலில் நியமிக்கப்பட்ட அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரியால் நேர்மையான செயல்படுத்தும் திறன் இவ்விஷயத்தில் தேவை. முக்கியமாக புதுவை மக்கள் தங்கள் நல்வாழ்வு, சமூகம் ஆகியவற்றில் தங்கள் சொந்த பொறுப்பை உணர்தல் அவசியம். புதுவைக்கு சேவையாற்ற 5-ம் ஆண்டில் நுழைகிறேன். என்னை பொறுத்தவரை எனது சேவை தொடங்கிவிட்டது. இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com