தூத்துக்குடியில் கஞ்சா, கஞ்சா ஆயில், கார், 2 பைக் பறிமுதல்: 7 பேர் கைது

தூத்துக்குடியில் கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருள்களை விற்பவர்கள், வாங்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் கஞ்சா, கஞ்சா ஆயில், கார், 2 பைக் பறிமுதல்: 7 பேர் கைது
Published on

தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோமஸ்புரம் பகுதியில் கார் மற்றும் 2 இருசக்கர வாகனங்களுடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அதில் அவர்கள் தூத்துக்குடியைச் சேர்ந்தவர்களான காசிமுனியசாமி (வயது 30), ஜோபிரகாஷ்(43), மரியமைக்கேல் தினேஷ்(27), இசக்கிபாலன்(25), பாலசசிகுமார்(20), ஜோகிங்ஸ்டன்(27), சிலுவை பீட்டர் விமல்(44) மற்றும் ஒரு இளஞ்சிறார் என்பதும், அவர்கள் கஞ்சா மற்றும் கஞ்சா ஆயில் வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்சொன்ன 7 பேரையும் கைது செய்தும், ஒரு இளஞ்சிறாரை கையகப்படுத்தி திருநெல்வேலி அரசு கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தும், அவர்களிடமிருந்து 150 கிராம் கஞ்சா, 12 கிராம் கஞ்சா ஆயில் மற்றும் ஒரு கார், 2 பைக்குகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுபோன்று கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருள்களை விற்பனை செய்பவர்கள் மற்றும் வாங்குபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com