

விழுப்புரம்,
திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலராக பணியாற்றி சமீபத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சரவணக்குமார் (வயது 55) என்பவர் ரூ.38 லட்சத்து 75 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு நேற்று முன்தினம் தனது காரில் சென்னைக்கு புறப்பட்டார். அப்போது விழுப்புரம் அருகே அரசூரில் அவரையும், அவரது காரை ஓட்டிச்சென்ற டிரைவரான மணியையும் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கிப்பிடித்து கணக்கில் வராத பணத்தையும் மற்றும் அந்த காரையும் பறிமுதல் செய்தனர். பின்னர் சரவணக்குமாரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், திருச்சி மாவட்ட ஆதிதிராவிட நலத்துறையில் காலியாக இருந்த சமையலர் பணியிடங்களை நிரப்புவதற்காக திருச்சி பகுதியை சேர்ந்த 12 பேரிடம் இருந்து சரவணக்குமார் லஞ்சம் வாங்கிக்கொண்டு அந்த பணியிடத்தை நிரப்பியுள்ளதும், இந்த பணத்தை ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் டிரைவராக பணியாற்றி வரும் மணி மற்றும் அங்குள்ள கல்லூரி மாணவர் விடுதியின் காப்பாளரான செந்தில் ஆகிய இருவரும் வசூலித்து அந்த பணத்தை சரவணக்குமாரிடம் கொடுத்துள்ளதும், இந்த லஞ்சப்பணத்தை சென்னை ஆதிதிராவிட நல இயக்குனரகத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வரும் கலைமோகன் என்பவருக்கு கொடுப்பதற்காக திருச்சியில் இருந்து சென்னைக்கு கொண்டு செல்ல முயன்றதும் தெரியவந்தது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சென்னை ஆதிதிராவிட நல இயக்குனரக உதவி செயற்பொறியாளர் கலைமோகன், ஆதிதிராவிட நல அலுவலர் சரவணக்குமார், டிரைவர் மணி, கல்லூரி மாணவர் விடுதி காப்பாளர் செந்தில் ஆகிய 4 பேர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.