

அம்மாபேட்டை
அம்மாபேட்டை பகுதியில் காவிரி ஆற்றில் தோட்டா வீசி மீன் பிடிக்கும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கோனேரிப்பட்டி கதவணை மின் நிலையம்
அம்மாபேட்டை அருகே கோனேரிப்பட்டி கதவணை மின் நிலையம் உள்ளது. இங்கு மின்சாரம் உற்பத்தி செய்வதால் இந்த கதவணையில் எப்போதும் தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது.
இதனால் அம்மாபேட்டை பகுதி காவிரி ஆறு எப்போதும் கடல்போல் காட்சியளிக்கும். வருடத்துக்கு ஒருமுறை மட்டும் ஏப்ரல்- மே மாதங்களில் பராமரிப்பு பணிகளுக்காக 15 முதல் 25 நாட்கள் வரை கதவணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படும். தற்போது கடந்த 3 தினங்களுக்கு முன்பு பராமரிப்பு பணிகளுக்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
மீன்கள் செத்து மிதக்கிறது
அப்போது கதவணையின் மேல் பகுதியான காட்டூர், சிங்கம்பேட்டை, அம்மாபேட்டை ஆகிய பகுதிகளில் காவிரி ஆற்றில் தண்ணீர் ஆங்காங்கே குட்டை போல் தேங்கி நிற்கிறது. அவ்வாறு தேங்கி நிற்கும் தண்ணீரில் மீன்கள் உள்ளன.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சில சமூக விரோதிகள் தோட்டாவை (வெடிமருந்து) வீசி காவிரியில் மீன்பிடித்து வருகின்றனர். இதனால் பெரிய மீன்கள் முதல் சிறிய மீன்கள் வரை செத்து மிதப்பதுடன் காவிரியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் காவிரி ஆற்றுக்கு குளிக்க செல்பவர்கள் முகம் சுளிக்கிறார்கள்.
தோட்டா வீசி...
இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் கூறுகையில், சிங்கம்பேட்டை, காட்டூர், அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதியில் 300-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகிறது. நாங்கள் அரசு வழிகாட்டுதலின்படி சங்கத்தில் பதிவு செய்து ஆண்டுதோறும் காவிரி ஆற்றில் வலைவீசி மீன் பிடித்து பிழைப்பு நடத்தி வருகிறோம். இந்த நிலையில் கதவணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டவுடன் சில சமூக விரோதிகள் கடந்த 2 நாட்களாக காவிரி ஆற்றில் தடை செய்யப்பட்ட தோட்டாக்களை வீசி மீன் பிடிக்கின்றனர். இதனால் மீன்கள் செத்து மிதக்கின்றன. பெரிய மீன்களை மட்டும் எடுத்துக்கொண்டு சிறிய வகை மீன்களை அப்படியே ஆற்றிலேயே விட்டுவிடுவதால் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. அதுமட்டுமின்றி சிறிய மீன் குஞ்சுகள் முற்றிலும் அழிந்து விடுவதால் மீன் உற்பத்தி பாதிக்கிறது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு தடை செய்யப்பட்ட தோட்டாவை (வெடிமருந்து) வீசி மீன் பிடிக்கும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், என வேண்டுகோள் விடுத்தனர்.