வறட்சி பாதித்த பகுதிகளை பார்வையிட்ட மத்திய குழுவினரிடம் விவசாயிகள் கண்ணீர்

வறட்சி பாதித்த பகுதிகளை பார்வையிட்ட மத்திய குழுவினரிடம் விவசாயிகள் கண்ணீர் மல்க பாதிப்புகளை எடுத்துக்கூறினார்கள்.
வறட்சி பாதித்த பகுதிகளை பார்வையிட்ட மத்திய குழுவினரிடம் விவசாயிகள் கண்ணீர்
Published on

புதுவையில் வறட்சி பாதித்த பகுதிகளை மத்தியக்குழுவினர் நேற்று பார்வையிட்டனர். அவர்கள் வில்லியனூர் அருகே ராமநாதபுரம் பகுதியில் பார்வையிட்டபோது விவசாயிகள் வறட்சியினால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்தியக்குழுவிடம் எடுத்துக்கூறினார்கள்.

ராமநாதபுரத்தில் மத்தியக்குழு பார்வையிட்டபோது வறட்சி பாதிப்பினால் விவசாயம் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். அதற்கு மத்தியக்குழுவினர் மாற்று பயிர் சாகுபடி செய்யுமாறு தெரிவித்தனர். மாற்று பயிர் சாகுபடிக்கு தேவையான தொழிலாளர்கள் கிடைப்பது அரிது என்று மத்தியக்குழுவினரிடம் விவசாயிகள் தெரிவித்தனர்.

விவசாயிகளிடம் மத்திய குழுவினர் கரும்பு பயிர் செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டனர். அதற்கு விவசாயிகள் கரும்பு கரும்பு பயிர் செய்தால் இந்த பகுதியிலுள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையில் காலம் தாழ்ந்து கரும்பு வெட்ட உத்தரவு அளிக்கின்றனர். மேலும் வெட்டிய கரும்புக்கும் காலம் தாழ்த்தியே தொகையை அளிக்கின்றனர் என்று வருத்தத்துடன் தெரிவித்தனர்.

தற்போது புதுவை மாநிலத்தில் இதுவரை தாங்கள் பார்த்திராத அளவுக்கு வறட்சி நிலவுவதாகவும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிவாரணம் வழங்கவேண்டும் என்றும் கண்ணீருடன் வலியுறுத்தினார்கள். ஆடு, மாடுகளுக்குக்கூட தீவனம் இல்லாமல் தவிப்பதாகவும் தெரிவித்தனர்.

காட்டேரிக்குப்பத்தில் மத்தியக்குழு ஆய்வு நடத்திய போது கரும்பு விவசாயிகள் தங்களது வேதனையை தெரிவித்தனர். ஏக்கர் ஒன்றுக்கு வழக்கமாக 50 டன் கரும்பு வெட்டும் இடத்தில் தற்போது வறட்சி காரணமாக 6 டன் மட்டுமே கரும்பு வெட்டுவதாக தெரிவித்தனர்.

மாடு வளர்ப்போர் தற்போது மாடுகளுக்கு பசுந்தீவனம் கிடைக்காததால் கரும்புசோகை, வைக்கோல் உள்ளிட்ட தீவனங்கள் வைப்பதாகவும், இதனால் பால் அளவு குறைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

அதன்பின் சோரப்பட்டுக்கு சென்ற மத்திய குழுவினரிடம் கிருஷ்ணவேணி என்ற பெண் தண்ணீரின்றி காய்ந்துபோன காராமணி பயிர்களை காட்டி புகார் தெரிவித்தார். வழக்கமாக ஏக்கர் ஒன்றுக்கு 10 மூட்டை அறுவடையாகும் காராமணி தற்போது வறட்சி காரணமாக 4 மூட்டைகள் மட்டுமே அறுவடை செய்யப்படுவதாக வேதனையுடன் கூறினார்.

அதுமட்டுமில்லாமல் கடும் பனி காரணமாக காராமணி பயிர்கள் கருப்பாக மாறிவிட்டதால் விலையும் குறைந்துவிட்டதாக கூறி கண்ணீர் விட்டார். அந்த பெண்மணிக்கு ஆறுதல் கூறிய மத்திய குழுவினர் உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com