2 பேரிடம் ரூ.10 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த 2 பேரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்தவர்களை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகிறார்கள்.
2 பேரிடம் ரூ.10 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை
Published on

தஞ்சாவூர்:-

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த 2 பேரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்தவர்களை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகிறார்கள்.

வெளிநாட்டில் வேலை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ராஜாமடம் அந்தோணியார்புரம் பகுதியை சேர்ந்த சேவியர் பிச்சை என்பவரின் மகன் அலெக்சாண்டர் (வயது 43). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு போலி பேஸ்புக் கணக்கில் கன்னியாஸ்திரி என கூறி ஒருவர் அறிமுகமாகி உள்ளார்.

அவர் தங்களுக்கு நாங்கள் உதவிகள் செய்கிறோம் என்று அந்த போலி பேஸ்புக் வாயிலாக தெரிவித்துள்ளார். ஆனால் அலெக்சாண்டர் தங்களுக்கு எந்த உதவிகளும் வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். அதற்கு அந்த கன்னியாஸ்திரி உங்கள் பகுதியில் உள்ளவர்களுக்கு உதவுங்கள். நாங்கள் பரிசுப் பொருட்களை அனுப்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

ரூ.8 லட்சம் மோசடி

மேலும் அலெக்சாண்டரின் வீட்டு முகவரி மற்றும் மனைவியின் செல்போன் எண்ணை பெற்றுள்ளார். தொடர்ந்து கடந்த 12-2-2022-ல் அலெக்சாண்டரின் மனைவி செல்போன் எண்ணுக்கு ஒரு மர்மநபர் போன் செய்துள்ளார். நாங்கள் ஏர்போர்ட் பார்சல் சர்வீசில் இருந்து பேசுகிறோம். உங்களுக்கு வெளிநாட்டில் இருந்து பார்சல் வந்துள்ளது. அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறி உள்ளார்.

இதுகுறித்து அலெக்சாண்டருக்கு அவருடைய மனைவி தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அந்த மர்மநபர் கூறிய வங்கி கணக்கில் பல்வேறு தவணைகளாக ரூ.8 லட்சத்து 56 ஆயிரத்து 400-ஐ அலெக்சாண்டர் செலுத்தி உள்ளார்.

போலீசில் புகார்

ஆனால் அவருக்கு எவ்வித பார்சலும் வரவில்லை. அனுப்பிய பணமும் திருப்பி தரப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அலெக்சாண்டர் சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து அலெக்சாண்டர் தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இன்னொரு சம்பவம்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை கரிக்காடு பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகன் முனுசாமி (32). விவசாயி. இவரது செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் தங்களின் வங்கி கணக்கில் சுய விவரங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை உண்மை என்று நம்பிய அவர் குறுந்தகவலில் வந்த லிங்கில் (இணையதள இணைப்பு) பெயர், முகவரி, வங்கி கணக்கு எண், பிறந்த தேதி உள்பட அனைத்து விவரங்களையும் பதிவிட்டுள்ளார். மேலும் ஓ.டி.பி. தகவலையும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவரது வங்கி கணக்கில் இருந்து மர்மநபர் ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 995-ஐ எடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த முனுசாமி தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com