இந்தியாவிலேயே மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு தடுப்பூசி போடுவதில் சென்னை மாநகராட்சி முதல் இடம்

மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு தடுப்பூசி போடுவதில் இந்தியாவிலேயே சென்னை மாநகராட்சி முதல் இடத்தில் உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு தடுப்பூசி போடுவதில் சென்னை மாநகராட்சி முதல் இடம்
Published on

சென்னை,

திரு.வி.கலியாணசுந்தரனார் 138-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவர் பிறந்த ஊரான மதுரவாயல் தண்டலம் கிராமம் திரு.வி.க நூலகத்தில் உள்ள அவரது சிலைக்குகீழ் வைக்கப்பட்டு இருந்த அவரது உருவப்படத்துக்கு தமிழக அரசு சார்பில், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பால்வளத்துறை அமைச்சர் நாசர், எம்.எல்.ஏ. கணபதி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் வீ.ப.ஜெயசீலன் உள்பட அரசு அதிகாரிகள் பலர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் தடுப்பூசி முகாம் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி போடுவதிலும், 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடுவதிலும் இந்தியாவிலேயே சென்னை மாநகராட்சி முதல் இடத்தில் உள்ளது. அந்தவகையில் இன்று (நேற்று) 200 வார்டுகளிலும் மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

அச்சம் தரக்கூடிய நிகழ்வு

இந்த சிறப்பு முகாம்கள் மூலம் சென்னை மாநகராட்சியில் ஏறக்குறைய 1 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்படும். தமிழகம் முழுவதும் 5 லட்சம் வரை இன்று (நேற்று) தடுப்பூசி போடும் பணி நடந்து கொண்டிருக்கிறது. நேற்று (நேற்று முன்தினம்) இரவு வரை 12 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் இருந்தது. மேலும் 4 லட்சம் தடுப்பூசிகள் வர இருக்கிறது. அச்சத்தை தரக்கூடிய நிகழ்வாகத்தான் கேரளாவில் நேற்று (நேற்று முன்தினம்) ஒரே நாளில் 31 ஆயிரத்து 455 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில் கேரளாவுக்கும், தமிழகத்துக்குமான போக்குவரத்து இணைப்பு எங்கெல்லாம் இருக்கிறதோ, அந்த மாவட்ட கலெக்டர்களுக்கு எல்லாம், தொடர்ந்து அறிவுறுத்தலை செய்து கொண்டிருக்கிறோம். அதன்படி, கேரளாவில் இருந்து யார் தமிழகத்துக்கு வந்தாலும், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதா என்பதை கட்டாயம் சோதனை செய்ய உத்தரவிட்டுள்ளோம். அதேபோல், விமானம், ரெயில்கள் மூலம் வருபவர்களுக்கு பரிசோதனை நடந்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com