சென்னை-செங்கல்பட்டு பிரிவில் மின்சார ரெயில்கள் தினமும் தாமதமாக வருவது ஏன்? அதிகாரி விளக்கம்

சென்னை-செங்கல்பட்டு பிரிவில் மின்சார ரெயில்கள் தினமும் 20 நிமிடம் வரை தாமதமாக வருவது ஏன்? என்பதற்கு ரெயில்வே அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை-செங்கல்பட்டு பிரிவில் மின்சார ரெயில்கள் தினமும் தாமதமாக வருவது ஏன்? அதிகாரி விளக்கம்
Published on

சென்னை,

சென்னை-செங்கல்பட்டு பிரிவு இடையே மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மின்சார ரெயிலை எதிர்நோக்கி செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், பெருங்களத்தூர், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து பலர் தங்கள் வேலைக்காக சென்னைக்கு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தாம்பரத்தில் இருந்து புறப்படும் அனைத்து மின்சார ரெயில்களும் பழவந்தாங்கல் ரெயில் நிலையத்தில் இருந்து கிண்டி ரெயில் நிலையம் வருவதற்கு 25 நிமிடங்கள் ஆகின்றன. இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

பல்லாவரம் முதல் கிண்டி வரை தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதாகவும், அதனால் அந்த பல்லாவரம் ரெயில் நிலையம் முதல் கிண்டி ரெயில் நிலையம் வரை வேகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் தான் மின்சார ரெயில்கள் அனைத்தும் தாமதமாக செல்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வழக்கமாக இந்த மார்க்கத்தில் பயணிக்கும் பயணிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக 25 நிமிடம் தாமதமாவதால் அலுவலகங்களுக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கும் உரிய நேரத்தில் செல்ல முடிவதில்லை. இது குறித்து பயணி ஒருவர் கூறியதாவது:-

நான் பெருங்களத்தூரில் இருந்து தினமும் காலையில் வேலைக்கு புறப்பட்டு மின்சார ரெயிலில் எழும்பூர் வருகிறேன். 9.01 மணிக்கு பெருங்களத்தூர் வரவேண்டிய ரெயில் இன்று(நேற்று) 9.15 மணிக்கு தான் வந்தது. மேலும் இந்த ரெயில் பழவந்தாங்கல் அருகே வந்தவுடன் மிகவும் மெதுவாக சென்றது. உரிய அறிவிப்பு இல்லாமல் ஏன் மெதுவாக சென்றது என்று தெரியவில்லை.

எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு 9.37 மணிக்கு வரவேண்டிய ரெயில் 10.10 மணிக்கு தான் வந்தது. மின்சார ரெயில்கள் குறித்த நேரத்தில் இருந்து 10 முதல் 20 நிமிடங்கள் வரை தாமதமாகவே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் எனது பணிக்கு தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை ரெயில்வே அதிகாரிகள் மாற்றி அமைக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com