

நெல்லை,
நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர் கோவிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. மதியம் 12 மணிக்கு நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், அஸ்திரதேவர், அஸ்திர தேவிக்கு கும்ப பூஜை, சிறப்பு பூஜை, அலங்கார தீபாராதனை நடந்தது.
இதைத்தொடர்ந்து மதியம் 1 மணிக்கு நெல்லையப்பர் கோவிலில் இருந்து சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், அஸ்திரதேவர், அஸ்திர தேவி, சண்டிகேசுவரர் ஆகிய மூர்த்திகளுடன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மேளதாளம் முழங்க தாமிரபரணி ஆற்றுக்கு புறப்பட்டனர். ஹைரோடு, ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பாலம் வழியாக கைலாசபுரம் சென்று தாமிரபரணி ஆற்றில் உள்ள தைப்பூச மண்டபத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளினர். அங்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.
மாலை 4 மணிக்கு அஸ்திரதேவர், அஸ்திர தேவிக்கு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினார்கள். மாலை 6 மணிக்கு சுவாமி-அம்பாள் தைப்பூச மண்டபத்தில் இருந்து புறப்பட்டு மீண்டும் கோவிலை சென்றடைந்தனர். சப்பரங்களுக்கு முன் யானை காந்திமதி பட்டாடைகளால் அலங்கரிக்கப்பட்டு நான்கு கால்களிலும் வெள்ளி கொலுசு அணிந்தபடி சென்றது. வழியில் ஏராளமான பக்தர்கள் தேங்காய் உடைத்து சுவாமி அம்பாளை வழிபட்டனர்.
நெல்லையப்பர் கோவிலில் இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு வசந்த திருவிழா தொடங்கி வருகிற 10-ந்தேதி வரை நடக்கிறது. தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி அம்பாளுக்கு வசந்தமண்டபத்தில் வைத்து சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெறும்.