திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியின் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு - தயார்படுத்தும் பணிகள் தீவிரம்

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியின் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு செய்தார். வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான உபகரணங்களை தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியின் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு - தயார்படுத்தும் பணிகள் தீவிரம்
Published on

திருப்பூர்,

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரி கட்டிடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இங்கு வாக்கு எண்ணிக்கை வருகிற 23-ந் தேதி காலை 8 மணிக்கு நடைபெற உள்ளது.

இதற்காக கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தை தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஏற்கனவே வாக்கு எண்ணிக்கை அறையில் கம்பி வலைகள் அமைப்பது, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது, வேட்பாளர்களின் முகவர்கள் அமருவதற்கான வசதிகள் உள்ளிட்டவை செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை அறைகளில் அலுவலர்களுக்கான மேஜை, இருக்கைகள் அமைப்பது, தபால் வாக்குகளை பிரித்து எண்ணுவதற்கான பெட்டிகள், வாக்கு எண்ணிக்கையின் போது தேவைப்படும் பொருட்கள், வாக்கு எண்ணிக்கை விவரத்தை தெரிவிக்கும் வகையில் பிரமாண்ட திரைகள் அமைப்பது, கணினி, இணையதள வசதி உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைப்பதற்கான பணிகள் நேற்று காலை நடைபெற்றது. இந்த பணிகளை தேர்தல் நடத்தும் அதிகாரியான திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை அறைக்கும் சென்று, வாக்கு எண்ணிக்கையின் போது பயன்படுத்தப்படும் உபகரணங்களை சரிபார்த்தார். வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) பாலசுப்பிரமணியன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் பாஷியம்(தேர்தல்), கீதா பிரியா(பொது), தேர்தல் தாசில்தார் முருகதாஸ், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள், காவல்துறை, பொதுப் பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com