

தினத்தந்தி புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மின்கம்பம் அகற்றப்படுமா?
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் அந்தோணியார் கோவில் தெரு சாலையில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை உள்ளது. இந்த பணிமனையின் எதிரே சாலையோரத்தில் இரும்பிலான மின்கம்பம் ஒன்று போக்குவரத்துக்கு இடையூறாக கீழே விழுந்துகிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் சாலையோரத்தில் மின்கம்பம் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். எனவே அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் மின்கம்பத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், பட்டுக்கோட்டை.
பஸ் வசதி வேண்டும்
தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து அம்மன்பேட்டை வழியாக நகர பஸ்கள் தினமும் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் மாணவ- மாணவிகள் அதிகளவில் பயணம் செய்கின்றனர். இந்த நிலையில் மேற்கண்ட வழித்தடத்தில் இயக்கப்படும் பெரும்பாலான நகர பஸ்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளியக்கிரஹாரம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொண்ட பகுதியில் முறையான பஸ் வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-சத்தியமூர்த்தி, தஞ்சை.
குரங்குகள் அட்டகாசம்
தஞ்சை மாவட்டம் திருவையாறு தாலுகா விளாங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் குரங்குகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இவை அந்தப் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை எடுத்து சென்று அட்டகாசம் செய்து வருகின்றன. அதுமட்டுமின்றி சாலையில் அங்கும் இங்கும் குரங்குகள் ஓடி செல்வதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். இதன் காரணமாக மேற்கண்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி விளாங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?
-லெனின், விளாங்குடி.