சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து கோவையில் கடைகள் அடைப்பு; ஆர்ப்பாட்டம்

சாத்தான்குளத்தில் தந்தை-மகன் இறந்த சம்பவத்தை கண்டித்து கோவையில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினார்கள்.
சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து கோவையில் கடைகள் அடைப்பு; ஆர்ப்பாட்டம்
Published on

கோவை,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் அவருடைய மகன் பெனிக்ஸ் ஆகியோரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச்சென்றனர். இந்தநிலையில் தந்தையும், மகனும் மரணம் அடைந்தனர். போலீசாரின் தாக்குதலினால்தான் இந்த மரணம் நிகழ்ந்தாக கூறி போராட்டங்கள் வலுத்து வருகிறது.

தந்தை-மகன் இறந்த சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

ஓட்டல், பேக்கரிகள்

கோவை மாவட்டத்தில் நேற்று ரங்கேகவுடர் வீதி, ராஜவீதி, டவுன்ஹால், திருச்சி ரோடு, ஆர்.எஸ்.புரம், உள்பட நகரின் பல பகுதிகளிலும் மளிகைகடைகள், சமையல் எண்ணெய் விற்பனை கடைகள் உள்ளிட்ட பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஓட்டல்கள், பேக்கரிகள் பகல் 12 மணி வரை அடைக்கப்பட்டு இருந்தன.

மருந்துக்கடைகள் பகல் 11 மணிவரை அடைக்கப்பட்டு இருந்தன. கோவை மாவட்டம் முழுவதும் 50 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததாக வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கோவை மாவட்ட தலைவர் ஜி.இருதயராஜ் தெரிவித்தார்.

கண்டன ஆர்ப்பாட்டம்

சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து, மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்தவர்கள் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். தந்தை-மகன் மரணத்திற்கு காரணமான போலீசாரை கைது செய்ய வேண்டும் என்றும், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் கோஷம் எழுப்பினார்கள்.

மனிதநேய மக்கள் கட்சி

சாத்தான்குளத்தில் தந்தை - மகன் போலீஸ் விசாரணையில் பலியான சம்பவத்தை கண்டித்தும் நீதி விசாரணை கோரியும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கோவை, மேட்டுப்பாளையம் உள்பட பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சமூக இடைவெளிவிட்டு நின்றிருந்தனர்.

மாவட்ட தலைவர் அகமது கபீர், மாநில செயற்குழு உறுப்பினர் சாகுல் அமீது, மாநில தொண்டரணி செயலாளர் ஷர்புதீன், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் முஜிப் ரகுமான், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பாபு, பொருளாளர் அப்பாஸ், ஆஷிக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com