குன்னூரில் மின்கம்பி உரசியதால் வீட்டில் தீப்பிடித்தது

குன்னூரில் மின்கம்பி உரசியதால் வீட்டில் தீப்பிடித்தது.
குன்னூரில் மின்கம்பி உரசியதால் வீட்டில் தீப்பிடித்தது
Published on

குன்னூர்,

குன்னூர் பஸ் நிலையம் அருகில் கன்னிமாரியம்மன் கோவில் தெரு உள்ளது. இந்த குடியிருப்பு பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள வீடுகளுக்கு மின்வினியோகம் செய்ய வசதியாக ஆங்காங்கே மின்கம்பங்கள் நடப்பட்டு உள்ளன. இந்த மின்கம்பங்களுக்கு செல்லும் மின்கம்பிகள் வீடுகளின் மேற்கூரையை ஒட்டியவாறு தாழ்வாக செல்கின்றன. இதனால் பலத்த காற்று வீசும்போது மின்கம்பிகள் வீடுகளின் மேற்கூரையில் உரசுகின்றன. அப்போது தீ விபத்து ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலை அந்த பகுதியில் பலத்த காற்று வீசியது. அப்போது அங்குள்ள லாரி டிரைவர் பாலன் என்பவரது வீட்டின் மேற்கூரையில் மின்கம்பி உரசி தீப்பிடித்தது.

உடனே பாலன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே வந்தனர். ஓடுகளால் வேயப்பட்ட மேற்கூரையில் பொருத்தப்பட்டு இருந்த மரச்சட்டங்களில் தீ மள மளவென பரவி எரிந்தது. இதனால் அந்த பகுதியே கரும்புகை மண்டலமாக காட்சி அளித்தது. பின்னர் குன்னூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படை வீரர்கள் வந்தனர். ஆனால் தீயணைப்பு வாகனத்தை வீடு இருக்கும் இடத்துக்கு கொண்டு செல்ல முடியவில்லை.

இருப்பினும் வாகனம் இருக்கும் இடத்தில் இருந்து கூடுதல் இணைப்பு குழாய்கள் மூலம் தீப்பிடித்த வீட்டுக்குள் தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டது. தொடர்ந்து 2 மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. இதற்கிடையில் வீட்டுக்குள் இருந்த 3 கியாஸ் சிலிண்டர்கள் வெளியே கொண்டு வரப்பட்டன. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாகின. இதுகுறித்து குன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com