

திண்டுக்கல்:
சாலையின் நடுவில் மின்கம்பம்
திண்டுக்கல்லை அடுத்த பாறைப்பட்டியில் இருந்து வத்தலக்குண்டு செல்லும் சாலையின் நடுவில் ஆபத்தான நிலையில் மின்கம்பம் உள்ளது. இதன் காரணமாக இரவில் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள மின்கம்பத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரமணன், பாறைப்பட்டி.
குப்பைமேடான குடியிருப்பு பகுதி
திண்டுக்கல்லை அடுத்த செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி ராக்காபட்டி பாலன்நகர் குடியிருப்பு பகுதியில் குப்பை தொட்டிகள் வைக்கப்படவில்லை. இதனால் சாலையோரங்களிலேயே குப்பைகளை போட்டுச்செல்கின்றனர். இதன் காரணமாக அப்பகுதி குப்பைமேடாக மாறி வருவதுடன் துர்நாற்றமும் வீசுகிறது. குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, செட்டிநாயக்கன்பட்டி.
கால்வாயில் தேங்கும் கழிவுநீர்
தேனியை அடுத்த காட்டுநாயக்கன்பட்டி வடக்கு தெருவில் உள்ள சாக்கடை கால்வாயில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் கால்வாயிலேயே தேங்கி நிற்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசுப்புழுக்களும் உற்பத்தியாகிறது. இதனால் இரவில் கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. எனவே கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வீரகுரு, காட்டுநாயக்கன்பட்டி.
சேதமடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டி
பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சிங்காரக்கோட்டை பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி சேதமடைந்த நிலையில் உள்ளது. தொட்டியை தாங்கி நிற்கும் தூண்களில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் எப்போது வேண்டுமானாலும் தொட்டி இடிந்து கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டியை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கிருஷ்ணன், சிங்காரக்கோட்டை.