

மின்வாரியத்தின் உடனடி நடவடிக்கை
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சி 14-வது வார்டில் உள்ள மெயின்ரோட்டில் சாலை நடுவே வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக ஒரு மின்கம்பம் இருப்பதும், அக்கம்பம் பழுதடைந்து இருப்பது தினத்தந்தி புகார் பெட்டி மூலம் சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து அந்த மின்கம்பம் சீரமைக்கப்பட்டு போக்குவரத்துக்கு இடையூறாக இல்லாத வகையில் சாலையோரம் நடப்பட்டது. இதற்காக மின்வாரியத்துக்கும், தினத்தந்திக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
ஆபத்தான மின்கம்பம் அகற்றம்
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் தென்பட்டினம் கிராமம் சீ பிரீஸ் பகுதியில் உள்ள மின்கம்பம் மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் இருக்கும் செய்தி தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து கூவத்தூர் மின்வாரிய அதிகாரிகளின் உடனடி நடவடிக்கையால் ஆபத்தான அந்த மின்கம்பம் அகற்றப்பட்டு புதிய மின்கம்பத்தை நடப்பட்டுள்ளது. நீண்ட கால கோரிக்கை உடனடியாக நிறைவேறியதில் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பழுதடைந்த ஆட்டோ அகற்றம்
சென்னை கிழக்கு தாம்பரம் ஆனந்தபுரம் வள்ளலார் தெருவில் நீண்டகாலமாக ஒரு பழுதடைந்த ஆட்டோ நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதும், அதில் கொசுக்கள் படையெடுப்பதும் குறித்த செய்தி தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அந்த ஆட்டோவை உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தியுள்ளனர்.
நடவடிக்கை எடுப்பார்களா?
சென்னை வடபழனிகுமரன் காலனி 5-வது தெருவில் சாலையின் ஒரு பகுதி பெயர்ந்து இருக்கிறது. அந்த பள்ளத்தில் அருகேயுள்ள பாதாள சாக்கடை மூடி வழியாக வரும் கழிவுநீர் தேங்கி வருகிறது. இது வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதுடன், ஆபத்துக்கும் வழிவகுப்பதாக இருக்கிறது. எனவே இச்சாலையில் பள்ளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- பொதுமக்கள், குமரன் காலனி.
ஆபத்தான மின் இணைப்பு பெட்டி
சென்னை கோயம்பேடு மார்க்கெட் 4-வது நுழைவுவாயில் சந்திப்பின் இடதுபுறத்தில் மின் இணைப்பு பெட்டி ஒன்று இருக்கிறது. கதவுகள் உடைந்த நிலையில் வயர்கள் வெளியே நீட்டிக்கொண்டும் இருக்கின்றன. அதன் அருகே சிறுநீர் கழிக்கும் போக்கும் தொடர்ந்து வருகிறது. இந்த இடத்தை சீரமைத்து தர மாநகராட்சியும், சி.எம்.டி.ஏ. நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
- வியாபாரிகள்.
எரியாத தெருவிளக்கு
சென்னை அம்பத்தூர் மண்ணூர்ப்பேட்டை பெருமாள் கோவில் தெருவில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக தெருவிளக்கு எரியாமல் இருக்கிறது. இதனால் மாலை நேரம் தாண்டியதும் இருள் சூழ்ந்து விடுவதால் மக்கள் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். அருகில் உள்ள கடைகளுக்கு செல்லக்கூட சங்கடப்படுகிறார்கள்.
- சமூக ஆர்வலர்.
விழும் நிலையில் மின்கம்பம்
சென்னை ரெட்ஹில்ஸ் பம்மதுகுளம் சமூக கூடம் தெருவில் உள்ள மின்கம்பம் பழுதடைந்து இருக்கிறது. சிமெண்ட் பூச்சு பெயர்ந்தும், வளைந்தும் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் அபாயகரமாக காட்சியளிக்கிறது. அசம்பாவிதம் ஏற்படும் முன்பாக மின்வாரியம் தகுந்த நடவடிக்கைகளை கையாள வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
- பி.துரை, பம்மதுகுளம்.
மோசமான சாலை சீரமைக்கப்படுமா?
சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் 193-வது வார்டுக்குட்பட்ட கஸ்தூரிபாய் நகர் 2-வது தெருவில் சாலை மிகவும் மோசமாக காட்சி தருகிறது. குண்டும் கூழியுமாக வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் சாலையாக இருக்கிறது. மழைக்காலங்களில் நிலைமை இன்னும் மோசமடைந்து போகிறது. இச்சாலை சீரமைக்கப்பட்டு 8 வருடங்கள் ஆகிறது.
- வெ.ஶ்ரீதர், வெட்டுவான்கேணி.
கழிவுநீர் பிரச்சினையும், மக்கள் அவதியும்...
சென்னை தரமணி பெரியார்நகர் கருணாநிதி முதல் தெருவில் உள்ள பாதாள சாக்கடை மூடி உடைந்து, அதன் வழியாக கழிவுநீர் வெளியேறி சாலையில் செல்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. துர்நாற்றமும் வீசுகிறது. கொசுக்களின் படையெடுப்பும் மிகுதியாக இருக்கிறது. இதன் காரணமாக இப்பகுதிவாசிகளுக்கு பல்வேறு நோய்கள் உருவாகும் சூழலும் இருக்கிறது.
- பொதுமக்கள்.
செயலற்று கிடக்கும் கண்காணிப்பு கேமராக்கள்
திருவள்ளூர் மாவட்டம் காரனோடை பஜார் பகுதியில் காவல்துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் கடந்த 6 மாதங்களாக செயலற்ற நிலையில் இருக்கின்றன. இதனால் சமூக விரோத செயல்களை தடுக்கும் நடவடிக்கையில் தொய்வு ஏற்படுகிறது. தற்போது இப்பகுதியில் சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
- ஆர்.லோகேஸ்வர ராவ், புதுகுப்பம்.