குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த 2 குழந்தைகளின் தாய் திடீர் சாவு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகை

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட 2 குழந்தைகளின் தாய் திடீரென இறந்தார். இதையடுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர்.
குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த 2 குழந்தைகளின் தாய் திடீர் சாவு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகை
Published on

தர்மபுரி:

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட 2 குழந்தைகளின் தாய் திடீரென இறந்தார். இதையடுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர்.

2 குழந்தைகளின் தாய்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பூனையானூர் கிராமத்தை சேர்ந்தவர் சூர்யா (வயது 27). இவருக்கும், சேலம் கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 4 வயதில் மகளும், 2 வயதில் மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி பூனையானூருக்கு வந்த சூர்யா குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தார். அதற்காக பையர்நத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவர் சேர்ந்தார். அங்கு சூர்யாவிற்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு அதிக அளவில் மயக்க மருந்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

உறவினர்கள் முற்றுகை

இந்த நிலையில் சிகிச்சைக்கு பின் சூர்யாவிற்கு நினைவு திரும்பவில்லை. இதனால் அவரை மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நினைவு திரும்பாமல் இருந்த சூர்யா நேற்று அதிகாலை திடீரென உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சூர்யாவிற்கு தவறான அறுவை சிகிச்சை செய்ததாக கூறி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் முற்றுகையிட்டு டாக்டர்கள் மற்றும் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சூர்யாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும் வரை சூர்யாவின் உடலை வாங்க மாட்டோம் என்று குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து போலீசார் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் சூர்யாவின் குடும்பத்தினர், உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து நேற்று மாலை சூர்யாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட 2 குழந்தைகளின் தாய் திடீரென இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com