

பெங்களூரு:
மத்திய ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர்
பெங்களூரு எலகங்காவில் உள்ள மத்திய ஆயுதப்படையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சுவாமிகவுடா (வயது 55). இவர், நேற்று முன்தினம் இரவு மத்திய ஆயுதப்படையில் பணியாற்றும் போலீசார், ஊழியர்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். மேற்கு கேட் பகுதியில் பணியாற்றும் வீரர்களை கண்காணித்துவிட்டு, கிழக்கு பகுதியில் உள்ள கேட்டுக்கு சுவாமிகவுடா நள்ளிரவு 11.45 மணியளவில் சாலையோரமாக நடந்து சென்றார்.
அப்போது சுவாமிகவுடா மீது அதே சாலையில் வந்த ஒரு மோட்டார் சைக்கிள் மோதியது. இதனால் சுவாமிகவுடா தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்தகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். அதுபோல், மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட வாலிபரும் தலையில் படுகாயம் அடைந்தார். இதுபற்றி அறிந்ததும் எலகங்கா போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து 2 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
என்ஜினீயரிங் மாணவர் சாவு
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு
வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி வாலிபர் சிறிது நேரத்தில் பலியானார். அதுபோல் சப்-இன்ஸ்பெக்டர் சுவாமிகவுடா நேற்று காலையில் உயிர் இழந்தார்.
போலீஸ் விசாரணையில், விபத்தில் பலியான வாலிபர் ஏமன் நாட்டை சேர்ந்த அத்மர் (வயது 22) என்பதும், பெங்களூருவில் தங்கி இருந்து தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்ததும் தெரியவந்தது.
அத்மர் ஹெல்மெட் அணிந்திருந்ததும், விபத்து நடந்ததும் ஹெல்மெட் கழன்று சென்று விட்டதால் அத்மரின் தலையில் பலத்தகாயம் அடைந்து பலியானதும் தெரியவந்தது. இதுகுறித்து எலகங்கா போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.