பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி நவம்பர் 21-ந் தேதி கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம்

பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி வருகிற நவம்பர் மாதம் 21-ந் தேதி தமிழகம் முழுவதும் கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், என பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி நவம்பர் 21-ந் தேதி கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம்
Published on

நாமக்கல்,

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில குழு கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் முனுசாமி தலைமை தாங்கினார். இதில் பொதுச்செயலாளர் முகமது அலி தீர்மானங்களை விளக்கி பேசினார்.

பின்னர் முகமது அலி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் தினசரி ஆவின் நிர்வாகம் மூலம் 33 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு தமிழக அரசு பசும் பாலுக்கு லிட்டருக்கு ரூ.28, எருமைப்பாலுக்கு ரூ.35 என விலை நிர்ணயம் செய்தது.

2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை. இதற்கிடையே தீவனம் விலை 50 சதவீதம் வரை உயர்ந்து விட்டது. இதனால் பால் உற்பத்தியாளர்கள் நெருக்கடியில் இருந்து வருகின்றனர். எனவே தமிழக அரசு பசும் பால் லிட்டர் ரூ.35 எனவும், எருமைப்பால் லிட்டர் ரூ.45 எனவும் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவிப்பு வெளியிட வேண்டும்.

பால் கொள்முதல் செய்யும் இடத்திலேயே பாலின் தரம் மற்றும் சத்து அளவீடு செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். கால்நடை தீவனங்களுக்கு தமிழக அரசு 50 சதவீத மானியம் வழங்க வேண்டும்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிர்வாகம் தொடக்க கூட்டுறவு சங்கங் களுக்கு பட்டாசுகளை விற்பனைக்கு கொடுத்தது. தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பால் பொருட்கள் விற்பனை செய்தால் பரவாயில்லை. சங்கத்திற்கு தொடர்பே இல்லாத நிலையில் பட்டாசு விற்பனைக்கு அனுமதி அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விற்பனையாகாத பட்டாசுகளை திரும்ப பெற வேண்டும்.

பால் பொருட்கள் விற்பனை தொடர்பான வரவு- செலவு கணக்குகளை தனியாக பராமரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (நவம்பர்) 21-ந் தேதி தமிழகம் முழுவதும் கலெக்டர், உதவி கலெக்டர், தாசில்தார் அலுவலகங்கள் முன்பு கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் துணை தலைவர்கள் சிவாஜி, ரத்தினம், செயலாளர்கள் முத்துபாண்டி, ராமசாமி, செல்லத்துரை, பொருளாளர் சங்கர், மாவட்ட தலைவர் முத்துசாமி, செயலாளர் பூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com