முழு ஊரடங்கின் போதும் கட்டுப்பாடுகளை மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்த மக்கள் போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பினர்

முழு ஊரடங்கின் போதும் கட்டுப்பாடுகளை மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
முழு ஊரடங்கின் போதும் கட்டுப்பாடுகளை மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்த மக்கள் போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பினர்
Published on

திண்டுக்கல்:

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக திண்டுக்கல்லில் முக்கிய சாலைகள் வாகன போக்குவரத்து இல்லாததால் நேற்று ஓய்வெடுத்தன. திருச்சி சாலை, பழனி சாலை, மதுரை சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

மாவட்ட எல்லைப்பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். வெளி மாவட்டங்களில் இருந்து கார், மோட்டார் சைக்கிள்களில் திண்டுக்கல்லுக்கு வருபவர்களை உரிய விசாரணைக்கு பின்னரே மாவட்டத்துக்குள் செல்ல போலீசார் அனுமதித்தனர்.

எச்சரிக்கை

மேலும் நகர் பகுதியில் பொதுமக்கள் தேவையின்றி வெளியே சுற்றித்திரிகின்றனரா? என்றும் போலீசார் கண்காணித்தனர். திண்டுக்கல் பஸ் நிலைய பகுதி, வெள்ளை விநாயகர் கோவில் சாலை உள்ளிட்ட இடங்களில் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பார்வையிட்டு அந்த வழியாக மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களை நிறுத்தி விசாரணை நடத்தினார். அப்போது அத்தியாவசிய தேவைக்காக வெளியே வந்தவர்களை மட்டும் அனுப்பி வைத்த சூப்பிரண்டு, ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி தேவையின்றி வெளியே வந்தவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தார்.

அதேநேரம் நகர் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் கட்டுப்பாடுகளை மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர். ஊரடங்கால் வீட்டில் முடங்கிய சிறுவர்கள், தங்கள் வீட்டு மொட்டை மாடியில் பந்து விளையாடி பொழுதை கழித்தனர்.

கொடைக்கானல்

கொடைக்கானல் நகரில் நேற்று காலை முதலே கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தங்கும் விடுதிகள் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தன. ஒருசில ஓட்டல்கள் பார்சல்கள் வழங்குவதற்காக மட்டும் திறந்து வைக்கப்பட்டிருந்தது. சுற்றுலா பயணிகள் வருகை முற்றிலும் இல்லாததால் சுற்றுலா இடங்கள் களைஇழந்தன. அத்துடன் வனப்பகுதிகளில் உள்ள சுற்றுலா இடங்கள் மூடப்பட்டன. ஊரடங்கை மீறி சாலையில் வலம் வந்த வாகன ஓட்டிகளை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பினர். முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு சுகாதாரத்துறையினர் மற்றும் போலீசார் அபராதம் விதித்தனர். கொரோனா 3-வது அலையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் 6 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக நகர்நல அலுவலர் டாக்டர் அரவிந்த் தெரிவித்தார்.

பழனி

ஊரடங்கையொட்டி பழனி அடிவாரம், காந்தி மார்க்கெட், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகள் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது மேலும் வாகனங்களில் வெளியே சுற்றிய நபர்களை போலீசார் தடுத்து நிறுத்தி எச்சரித்து அனுப்பினர். இதுபோல ஊரடங்கால் வேடசந்தூர், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு உள்பட மாவட்டம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com