மீனவர் வலையில் சிக்கிய ராட்சத திருக்கை மீன் ரூ.50 ஆயிரத்துக்கு ஏலம் போனது

மணக்குடியில் மீனவர் வலையில் சிக்கிய ராட்சத திருக்கை மீன் ரூ.50 ஆயிரத்துக்கு ஏலம் போனது.
மீனவர் வலையில் சிக்கிய ராட்சத திருக்கை மீன் ரூ.50 ஆயிரத்துக்கு ஏலம் போனது
Published on

தென்தாமரைகுளம்,

தென்தாமரைகுளம் அருகே கீழமணக்குடியை சேர்ந்தவர் வால்டன் (வயது 50). இவரும், அதே பகுதியை சேர்ந்த 4 மீனவர்களும் ஒரு படகில் மணக்குடியில் இருந்து கடலில் மீன்பிடிக்க சென்றனர். கரையில் இருந்து 3 நாட்டிக்கல் மைல் தொலைவில் அவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அவர்களது வலையில் ஆனைதிருக்கை என்ற ராட்சத திருக்கை மீன் ஒன்று சிக்கியது.

அந்த மீனை கரைக்கு இழுத்து வர மீனவர்கள் கடுமையாக போராடினார்கள். 4 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீனை கரைக்கு கொண்டு வந்தனர்.

1,500 கிலோ

பிடிபட்ட திருக்கை மீன் 1,500 கிலோ எடை இருந்தது. அந்த மீனை பார்க்க மணக்குடி கடற்கரையில் ஏராளமானோர் திரண்டனர். பொதுமக்கள் மத்தியில் அந்த மீன் ஏலம் விடப்பட்டது. வியாபாரி ஒருவர் ரூ.50 ஆயிரத்துக்கு அந்த மீனை ஏலம் எடுத்தார்.

திருக்கை மீனை பிடித்த மீனவர் ஒருவர் கூறியதாவது:

ராட்சத திருக்கை மீன் எங்கள் வலையில் சிக்கியதும் அதை கரைக்கு கொண்டுவர முடிவு செய்தோம். ஆனால், அந்த இடம் ஆழமாக இருந்ததால் மீன் எங்களை கடலுக்குள் இழுத்தது. இறுதியில் ஒரு வழியாக சமாளித்து கரைக்கு கொண்டு வந்தோம்.

பொதுவாக குறைந்த எடை கொண்ட திருக்கை மீன் அதிக விலைக்கு போகும். மீன் எடை அதிகம் இருந்தால் குறைந்த விலைக்கே விற்பனையாகும். இந்த மீனின் எடை 1,000 கிலோவுக்குள் இருந்திருந்தால் ரூ.1 லட்சத்துக்கு மேல் ஏலம் போயிருக்கும். ஆனால், 1,500 கிலோ எடை கொண்டதால் ரூ.50 ஆயிரத்துக்கு ஏலம் போனது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com