

கடலூர்,
கோடை காலங்களில் மீன்களின் இனப்பெருக்கம் அதிகளவில் நடைபெறும். இந்த காலங்களில் மீன்கள் கடலுக்கு அடியில் உள்ள பாறைகளில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். அந்த சமயங்களில் மீனவர்கள் விசைப்படகுகளில் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும்போது படகுகள் மற்றும் வலைகளில் அடிபட்டு மீன்குஞ்சுகள் அழியும் நிலை ஏற்பட்டது.
அதனால் தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின் கீழ் கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டும், கடலில் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையிலும், கடந்த 1983-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டின் கிழக்கு கடல் பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் மே மாதம் 30-ந் தேதி வரை 45 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வந்தது.
தடைகாலம்
இந்த நிலையில் தற்போது மீன்பிடி தடைக்காலத்தை தமிழக அரசு 61 நாட்களாக உயர்த்தி அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மீன்பிடி தடைக்காலம் கடந்த 15-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து 61 நாட்கள் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடைக்காலத்தில் விசைப்படகுகள், இழுவை படகுகளை மீனவர்கள் ஆழ்கடலுக்கு எடுத்துச்சென்று மீன்பிடிக்க கூடாது. ஆனால் சிறிய படகுகளில் கடற்கரையோரத்திலும், 3 கிலோ மீட்டர் தொலைவுக்குள்ளும் மீன்பிடிக்கலாம்.
மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்து ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில் கடலூர் தாழங்குடா பகுதி மீனவர்கள் தங்களது படகுகளை துறைமுகத்திலும், கடலோரத்திலும் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் அவர்கள் மீன்பிடி தடைக்காலத்தை பயன்படுத்தி, தங்களது படகுகளை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சீரமைத்தல்
இதில் வர்ணம் பூசுதல், படகுகளில் உள்ள பழுதினை வெல்டிங் செய்து சரிசெய்தல், பலகைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மீன்பிடி வலைகளை சீரமைக்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி புதிய வலை பின்னும் பணியும் நடைபெறுகிறது. பொதுவாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் விசைப்படகு மீனவர்கள் ஒருவார காலம் கடலில் தங்கி மீன்பிடித்து வருவார்கள்.
அப்போது பிடிக்கப்படும் மீன்களை ஐஸ் வைத்து பதப்படுத்துவார்கள். ஆனால் மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாததால், தற்போது ஐஸ் கட்டி தயாரிக்கும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐஸ் கட்டி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ரூ.5 லட்சம்
இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், கடலூர் தாழங்குடா, தேவனாம்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகிறோம். தற்போது ஆழ்கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் வேலைக்கு செல்லவில்லை. அதனால் பழுதடைந்த படகுகளை சீரமைத்து வருகிறோம். ஒரு படகை சீரமைக்க குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை செலவாகிறது. ஒரு வலையை 8 பேர் சேர்ந்து பின்னினால் ஒரு நாளில் முடித்து விடலாம் என்றார்.