

சிக்கமகளூரு
ஹாசனில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் மந்திரி சரணபிரகாஷ் பட்டீல் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்குள்ள நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
ஹாசனில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில், மந்திரி சரணபிரகாஷ் பட்டீல் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்குள்ள நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் டாக்டர்களிடம் ஆஸ்பத்திரியில் போதுமான அளவு மருந்து, மாத்திரைகள் உள்ளனவா என்ற விவரங்களை கேட்டறிந்தார்.
மேலும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், ஆஸ்பத்திரியில் உள்ள நவீன வசதிகள் மற்றும் கழிவறைகள், நோயாளிகளுக்கான அறைகள் ஆகியவற்றை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் டாக்டர்கள், மருந்துமாத்திரைகளை வெளியில் இருந்து வாங்கி வருமாறு நோயாளிகளுக்கு எழுதி கொடுக்கக்கூடாது. ஆஸ்பத்திரியிலேயே அனைத்து மருந்துமாத்திரைகளும், அத்தியாவசிய மருந்துகளும் உள்ளன. எந்தவொரு நோயாளி வந்தாலும் அவருக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளையும் அளிக்க வேண்டும்.
ஹாசனில் உள்ள மருத்துவக்கல்லூரியில் 100 இடங்களும் மட்டுமே இதுவரை இருந்து வந்தது. அடுத்த ஆண்டு முதல் மாணவர்களின் எண்ணிக்கை 150ஆக உயர்த்தப்பட உள்ளது. மேலும் அரசு மருத்துவக்கல்லூரிக்கு தேவையான விடுதி வசதிகள், நவீன வசதிகள் என அனைத்தும் செய்து கொடுக்கப்பட இருக்கிறது. இதுமட்டுமல்லாமல் பிரசவத்திற்கு என்று புதிய கட்டிடம் கட்டப்பட்டு அதை தனிப்பிரிவாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.