நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோவில் விழாவில் திரளான ஆண் பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் பெண்கள் தலையில் பூ வாரி போடப்பட்டது

பரமத்தி வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோவில் விழாவில்
நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோவில் விழாவில் திரளான ஆண் பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் பெண்கள் தலையில் பூ வாரி போடப்பட்டது
Published on

பரமத்தி வேலூர்,

பரமத்தி வேலூர் அருகே நன்செய் இடையாறில் மிகவும் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் தீ மிதி திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் காவிரியில் நீராடி கம்பத்திற்கும், மாரியம்மனுக்கும் பால் மற்றும் தீர்த்தங்கள் ஊற்றி மஞ்சள் கயிறு அணிந்து கொண்டனர்.

தொடர்ந்து தினமும் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை வடிசோறு நிகழ்ச்சியும், அக்னிசட்டி எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று மதியம் ஆண், பெண் பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த 63 அடி நீளமும், 6 அடி அகலமும் கொண்ட பூக்குண்டத்தில் திரளான ஆண் பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மதியம் 1 மணிக்கு தொடங்கிய பூக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இரவு வரை நடைபெற்றது.

இதேபோல பெண் பக்தர்கள் தலையில் பூ வாரிப்போடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் கோவை, கும்பகோணம், சென்னை, சேலம், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளாமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.

விழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) கிடா வெட்டும் நிகழ்ச்சியும், காலை பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற அலகு குத்தியும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கோவிலில் வேண்டி குழந்தை பிறந்த பின்பு கரும்பில் தொட்டில் கட்டி கோவிலை சுற்றி வந்து நேர்த்தி கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை (புதன்கிழமை) அதிகாலை கம்பம் ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

திருவிழாவை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா பரிந்துரையின் பேரில், பரமத்தி வேலூர் இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளை நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோவில் எட்டுப்பட்டி அறங்காவலர் குழுவினர், விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com