சத்தியமங்கலம் பகுதியில் ஊரடங்கால் கைத்தறி நெசவு தொழில் பாதிப்பு; கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சேலைகள் தேக்கம்

ஊரடங்கு காரணமாக சத்தியமங்கலம் பகுதியில் கைத்தறி நெசவு தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பட்டு சேலைகள் விற்க முடியாமல் தேக்கம் அடைந்துள்ளன.
சத்தியமங்கலம் பகுதியில் ஊரடங்கால் கைத்தறி நெசவு தொழில் பாதிப்பு; கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சேலைகள் தேக்கம்
Published on

பவானிசாகர்,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், சதுமுகை, டி.ஜி.புதூர், தொட்டம்பாளையம், புஞ்சைபுளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நெசவாளர்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கைத்தறி மூலம் நெசவு செய்யப்படும் பட்டு சேலை, கோரா பட்டு சேலை உள்பட பல்வேறு ரக சேலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் சேலைகள் கோயம்புத்தூர் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய ஜவுளி கடைகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன. அதுமட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களுக்கும் இங்கிருந்து பட்டு சேலைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இங்குள்ள நெசவாளர்களுக்கு சேலை நெசவு செய்வதற்கு தேவையான அனைத்து நூல், பட்டு உள்ளிட்ட மூலப்பொருட்கள் கொடுக்கப்பட்டு ஒரு சேலைக்கு ரகத்துக்கு ஏற்றார் போல் நெசவு கூலி கொடுக்கப்படுகிறது. இந்த கூலியை நம்பித்தான் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கை நகர்ந்து வருகிறது.

இந்த நிலையில் கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்காரணமாக போக்குவரத்து முற்றிலும் முடங்கி போனது. ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கும், ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் அனைத்து தொழில் நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டன.

இதில் கைத்தறி நெசவு தொழிலும் அடங்கும். இதன்காரணமாக கைத்தறி நெசவு தொழிலாளர்கள் வேலையின்றி வீட்டுக்குள்ளேயே முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எந்தவித வருமானமுமின்றி கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கை வறுமைக்கோட்டிற்கு கீழ் சென்றுவிட்டது.

அதுமட்டுமின்றி ஏற்கனவே உற்பத்தி செய்து வைக்கப்பட்டு உள்ள கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கைத்தறி சேலைகளும் விற்பனை செய்ய முடியாமல் தேக்கம் அடைந்து உள்ளது. இதனால் கைத்தறி நெசவாளர்களின் வாழ்கை கேள்விக்குறியாகி உள்ளது.

எனவே அரசு உரிய நஷ்ட ஈடு வழங்கி தங்களுடைய வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் என சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த கைத்தறி நெசவு தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com