கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தொடர் உண்ணாவிரத போராட்டம்

கோவில்பட்டியில் 2–வது குடிநீர் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நேற்று தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.
கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தொடர் உண்ணாவிரத போராட்டம்
Published on

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் 2வது குடிநீர் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நேற்று தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 2வது பெரிய நகரமான கோவில்பட்டியில் சுமார் 1 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 1976ம் ஆண்டு தொடங்கப்பட்ட குடிநீர் திட்டத்தின் ஆயுட்காலம் முடிந்து, 6 ஆண்டுகளாகி விட்டன. இதையடுத்து, கடந்த 2011ம் ஆண்டு ரூ.81 கோடியே 82 லட்சம் செலவில் 2வது குடிநீர் திட்ட பணிகள் தொடங்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றுப்படுகையில் இருந்து கோவில்பட்டிக்கு சுமார் 51 கிலோ மீட்டர் தூரத்துக்கு இரும்பு குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 18 மாதங்களில் நிறைவேற்ற வேண்டிய பணிகளை துரிதமாக செயல்படுத்தாததால், இன்னும் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு குடிநீர் குழாய்கள் பதிக்க வேண்டி உள்ளது.

எனவே கோவில்பட்டி 2வது குடிநீர் திட்டத்துக்காக, குருமலை ஊத்துப்பட்டி இடையே 1,700 மீட்டர் தூரத்துக்கு இரும்பு குழாய்கள் பதிக்க வனத்துறையிடம் அனுமதி வாங்கி கொடுக்க வேண்டும். கிடப்பில் போடப்பட்ட 3 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை உடனே கட்ட வேண்டும்.

கோவில்பட்டியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் வகையில் தெருக்களில் 88 கிலோ மீட்டர் தூரத்துக்கு குழாய்கள் பதிக்கும் பணியை உடனே தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 18 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், நேற்று காலையில் தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.

நகர செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வடக்கு மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், பொருளாளர் பாஸ்கரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் அர்ச்சுணன், ஒன்றிய செயலாளர் ஜோதிபாசு, மாவட்ட குழு உறுப்பினர் விஜயலட்சுமி, சர்க்கரையப்பன், தங்கவேல், அந்தோணி செல்வம், சக்திவேல் முருகன், முத்துலட்சுமி, கொம்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டியில் 2வது குடிநீர் திட்ட பணிகள் நிறைவு பெறும் வரையிலும், இரவும் பகலுமாக தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று கட்சி நகர செயலாளர் முருகன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com