நாகர்கோவில் ஆயுதப்படை முகாம் வளாகத்தில் போக்குவரத்து பூங்கா - டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார் திறந்து வைத்தார்

நாகர்கோவில் ஆயுதப்படை முகாம் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து பூங்காவை நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார் திறந்து வைத்தார்.
நாகர்கோவில் ஆயுதப்படை முகாம் வளாகத்தில் போக்குவரத்து பூங்கா - டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார் திறந்து வைத்தார்
Published on

நாகர்கோவில்,

நாகர்கோவில் மறவன்குடியிருப்பில் ஆயுதப்படை முகாம் அமைந்துள்ளது. இந்த முகாம் வளாகத்தில், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும், வாகனங்களை எவ்வாறு ஓட்டி செல்ல வேண்டும் என்பதை விளக்கும் வகையில் போக்குவரத்து சிக்னல்கள் அடங்கிய போக்குவரத்து சிறுவர் பூங்கா ரூ.10 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று காலையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தலைமை தாங்கினார். நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார் போக்குவரத்து பூங்காவை திறந்து வைத்து, பார்வையிட்டார்.

இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜயபாஸ்கர், பயிற்சி உதவி சூப்பிரண்டு கார்த்திகேயன், ஆயுதப்படை துணை சூப்பிரண்டு தங்கரத்தினம், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கண்மணி மற்றும் போலீசார், பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஆயுதப்படை வளாகத்தில் கூடைப்பந்து மைதானம் அருகில் அமைக்கப்பட்டுள்ள இந்த போக்குவரத்து சிறுவர் பூங்காவில் போக்குவரத்து சிக்னல்கள், மேம்பாலங்கள், ரெயில் தண்டவாளம், பள்ளிக்கூடம், உழவர் சந்தை போன்றவற்றின் மாதிரிகளும் இடம் பெற்றுள்ளன.

வாகன ஓட்டிகள் போக்குவரத்து சிக்னல்களுக்கு தகுந்தவாறு எவ்வாறு வாகனங்களை ஓட்டி செல்ல வேண்டும்? மேம்பாலங்கள் மற்றும் ரெயில் தண்டவாளம், பள்ளிக்கூடம், சந்தை போன்றவை அமைந்துள்ள பகுதிகளில் வாகனங்களை எவ்வாறு ஓட்டி செல்ல வேண்டும்? என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பூங்காவை பள்ளி மாணவ- மாணவிகள் எவ்வித தடையுமின்றி பார்த்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com