

மேலகிருஷ்ணன்புதூர்,
நாகர்கோவில், பீச்ரோட்டில் உள்ள பெரியவிளையில் ஒரு அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று முதல் 3 நாட்களுக்கு கொடை விழா நடக்கிறது. இதையொட்டி சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன் கோவிலில் இருந்து பெரியவிளை கோவிலுக்கு பால்குட ஊர்வலம் நடத்த கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்தனர்.
இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை எனத்தெரிகிறது. கோவிலில் இருந்து 200 மீட்டர் தொலைவுக்குள் தான் ஊர்வலம் நடத்த வேண்டும் என்றும், வேறு இடங்களில் இருந்து ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை என்றும் போலீசார் கூறியிருந்தனர்.
போலீஸ் தடை
ஆனால் நேற்று காலை சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோவிலில் இருந்து பெரியவிளை கோவிலுக்கு பால் குடம் எடுத்தப்படி பக்தர்கள் ஊர்வலம் செல்ல திரண்டனர். அப்போது அங்கு வந்த போலீசார் பால்குட ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை என்று கூறி தடுத்தனர்.
இதனால் அங்கு பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. மேலும் பக்தர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதமும் ஏற்பட் டது. இதுகுறித்து தகவல் அறிந்த உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று சமரசம் செய்தனர்.
வேனில் புறப்பட்டனர்
இதையடுத்து பக்தர்கள் பால் குடங்களுடன் சுசீந்திரத்தில் இருந்து வேனில் பெரியவிளை புறப்பட்டனர்.
அவர்கள் நாகர்கோவில் பீச் ரோடு சந்திப்பு வந்தடைந்ததும், அங்கு வேனில் இருந்து இறங்கி கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.