திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்ட கொப்பரை மலை உச்சியிலிருந்து இறக்கப்பட்டது

திருவண்ணாமலையில் மலைஉச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம் 11 நாள் சுடர்விட்டு காட்சியளித்த நிகழ்வு முடிந்ததையடுத்து ராட்சத கொப்பரை கீழே கொண்டு வரப்பட்டது.
திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்ட கொப்பரை மலை உச்சியிலிருந்து இறக்கப்பட்டது
Published on

திருவண்ணாமலை,

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை மகாதீப திருவிழா கோலாகலமாக நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான மகாதீபம் கடந்த 10-ந் தேதி 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது.

மகாதீபத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் வணங்கி தரிசனம் செய்தனர். இவ்வாறு மலையின் உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம் தொடர்ந்து நேற்று அதிகாலை வரை 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளித்தது.

மகா தீபத்திற்காக அருணாசலேஸ்வரர் கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட நெய், காடாதுணி ஆகியவை மலைக்கு கொண்டு செல்லப்பட்டது. தீபத் திருவிழாவின் போது மகா தீபத்தை நேரில் வந்து தரிசிக்க இயலாத பக்தர்கள் மகா தீபத்தை காண நேற்று முன்தினம் இரவு வரை திருவண்ணாமலைக்கு வருகை தந்து தீப தரிசனம் செய்தனர்.

மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபத்தை காண நேற்று முன்தினம் மாலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டு இருந்தனர். பின்னர் 6 மணியளவில் மகா தீபம் ஏற்றப்பட்டபோது பக்தர்கள் மகா தீபத்தை தரிசனம் செய்தனர். தொடர்ந்து நேற்று அதிகாலை வரை மகா தீபம் காட்சி அளித்தது.

இதனையடுத்து நேற்று காலை மகா தீபம் ஏற்றப்பட்ட கொப்பரை 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை உச்சியில் இருந்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. மலையில் இருந்து கோவிலுக்கு தீப கொப்பரையை கொண்டு வரும் வழிநெடுகிலும் பக்தர்கள் அதனை தொட்டு வணங்கினர். தொடர்ந்து மாலை கோவிலில் தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

இந்த நிலையில் வருகிற ஜனவரி மாதம் 10-ந் தேதி நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தன்று தீபச்சுடர் பிரசாதம் (தீபமை) அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளும் நடராஜருக்கு அணிவிக்கப்படும். பின்னர் நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தீபமை பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com