7 மாத குழந்தை உள்பட மும்பையில் புதிதாக 22 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 108 ஆக அதிகரிப்பு

மும்பையில் நேற்று ஒரே நாளில் 7 மாத குழந்தை உள்பட 22 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 108 ஆக அதிகரித்து உள்ளது.
7 மாத குழந்தை உள்பட மும்பையில் புதிதாக 22 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 108 ஆக அதிகரிப்பு
Published on

மும்பை,

நாட்டின் நிதிதலைநகரான மும்பையை ஆட்கொல்லி கொரோனா வைரஸ் பாடாய் படுத்தி வருகிறது. மும்பை பெருநகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. வெளிநாட்டு பயணிகள் மற்றும் அவர்களை சார்ந்து இருந்தவர்களை மட்டும் பாதித்து இருந்த கொரோனா தற்போது சாதாரண மக்கள் மற்றும் மும்பையின் குடிசைப்பகுதிகளுக்கும் ஊடுருவி உள்ளது. இது பொதுமக்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோல சுகாதாரத்துறையினரும் நோய் பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிவதில் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மும்பை மாநகராட்சி செவன்ஹில்ஸ் ஆஸ்பத்திரியில் 35 படுக்கைகளுடன் கூடிய தனிமை வார்டும், பவாய் எம்.சி.எம்.சி.ஆர். ஆஸ்பத்திரியில் 250 படுக்கைகளுடன் தனிமை வார்டும் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் நேற்று ஒரேநாளில் மும்பையில் மட்டும் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களில் மும்பை புறநகரை சேர்ந்த 7 மாத ஆண் குழந்தை, வாஷியை சேர்ந்த 1 வயது ஆண் குழந்தையும் அடங்குவர்.

கொரோனா பாதிப்பு உள்ளதாக கண்டறிப்பட்ட 22 பேரில் 12 பேர் ஆண்கள். 10 பேர் பெண்கள். இதில் 15 பேர் மும்பை நகர் மற்றும் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். 3 பேர் பால்கரை சேர்ந்தவர்கள். புனே, கல்யாண், டோம்பிவிலி, வாஷியை சேர்ந்த தலா ஒருவர் இதில் அடங்குவர்.

இதன்மூலம் மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 108 ஆக உயர்ந்தது. இதில் 6 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் மும்பை மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது.

பொதுமக்கள் மளிகை பொருட்கள், காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் முடிந்தவரை ஆன்லைனில் வாங்குமாறு மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com