கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்க வேண்டும்-ஆய்வுக்குழு உறுப்பினர் வலியுறுத்தல்
புதுக்கோட்டை,
கலந்தாய்வு கூட்டம்
ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசு வகுத்துள்ள நெறிமுறைகள் அடிப்படையில் நடத்துவது தொடர்பாக இந்திய கால்நடை நல வாரிய ஜல்லிக்கட்டு ஆய்வுக்குழு உறுப்பினர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் எஸ்.கே.மிட்டல் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வருவாய்த்துறை, போலீஸ் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, தீயணைப்புத்துறை ஆகிய துறை அலுவலர்களுடன் பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. ஆய்வுக்கு பின்னர் ஜல்லிக்கட்டு ஆய்வுக்குழு உறுப்பினர் மிட்டல் நிருபர்களிடம் கூறியதாவது:-
கெரோனா தடுப்பூசி
அரசு வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதை மாவட்ட நிர்வாகம் மற்றும் விழா குழுவினர் உறுதி செய்ய வேண்டும். இதன்மூலம் கால்நடைகளுக்கும், மனிதர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் போட்டிகள் நடத்த தகுந்த ஏற்பாடுகளை விழா குழுவினர் ஏற்பாடு செய்ய வேண்டும்.
அதனடிப்படையில் போட்டிகளில் முழு உடல் தகுதி பெற்றுள்ள காளைகள் மட்டும் பங்கேற்க வேண்டும். மேலும் வீரர்கள் அனைவரும் அரசு தெரிவித்துள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
சட்டம், ஒழுங்கு பாதிப்பு
போட்டியை கண்டுகளிக்கும் பார்வையாளர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் இரண்டு அடுக்கு இரும்பு தடுப்புகளை அமைக்க வேண்டும். இப்போட்டி நடைபெறும் இடத்தில் வீரர்களுக்கும், காளைகளுக்கும் காயங்கள் ஏற்படாத வகையில் தேங்காய் நார் உள்ளிட்டவைகளை கொண்டு நிரப்பிட வேண்டும்.
போட்டிகளில் பாதிப்பு ஏற்படும் மனிதர்கள் மற்றும் காளைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் போதுமான அளவில் மருத்துவ குழுவினர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நிகழ்ச்சிகள் அனைத்தையும் சி.சி.டி.வி. கேமரா மூலம் பதிவு செய்ய வேண்டும். மேலும் சட்டம், ஒழுங்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் போலீசார் மூலமாக தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டியை அரசு வகுத்துள்ள நெறிமுறைகளின் அடிப்படையில் அலுவலர்கள் மற்றும் விழா குழுவினர்கள் அனைவரும் போட்டிகளை நடத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

