கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டையில் 7 பஸ்களின் கண்ணாடிகள் கல்வீசி உடைப்பு

கள்ளக்குறிச்சி மற்றும் உளுந்தூர்பேட்டையில் 7 பஸ்களின் கண்ணாடிகளை கல்வீசி உடைத்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டையில் 7 பஸ்களின் கண்ணாடிகள் கல்வீசி உடைப்பு
Published on

கள்ளக்குறிச்சி,

கோயம்புத்தூரில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு சென்னை நோக்கி புறப்பட்டது. இந்த பஸ்சை சேலம் மாவட்டம் கங்கமசமுத்திரம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 48) என்பவர் ஓட்டினார். அந்த பஸ் நேற்று அதிகாலை 4 மணிக்கு கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் வந்து கொண்டிருந்தது.

அப்போது மர்மநபர்கள் சிலர் அந்த பஸ்சை வழிமறித்து அதன் மீது கற்களை வீசினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

அந்த சமயத்தில் சென்னையில் இருந்து சேலத்துக்கு சென்ற 2 ஆம்னி பஸ்கள் மீதும், சென்னையில் இருந்து எர்ணாகுளம் நோக்கி சென்ற ஒரு ஆம்னி பஸ் மீதும் கற்களை வீசினர். இதில் அந்த 3 ஆம்னி பஸ்களின் முன்பக்க கண்ணாடிகளும் உடைந்து விழுந்தன. இதைப்பார்த்து பஸ்களில் இருந்த பயணிகள் கூச்சல் போட்டனர்.

உடனே மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து அரசு பஸ் டிரைவர் பிரகாஷ், கள்ளக்குறிச்சி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் பஸ்களின் கண்ணாடிகளை கல்வீசி உடைத்த மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

இதேபோல் சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் ஒன்று சேலம் நோக்கி புறப்பட்டது. இந்த பஸ் நேற்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே செம்பியன்மாதேவியில் உள்ள காப்புக்காடு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது மர்மநபர்கள் சிலர் பஸ்சை வழிமறித்து அதன் மீது கற்களை வீசினர்.

இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இந்த சத்தம் கேட்ட பயணிகள் கூச்சல் போட்டனர். உடனே மர்மநபர்கள் அங்கிருந்து காப்புக்காட்டுக்குள் ஓடி தலைமறைவாகினர். இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதையடுத்து டிரைவர் பஸ்சை அங்கிருந்து ஓட்டிச் சென்றார்.

இந்த நிலையில் அந்த வழியாக வந்த மேலும் 2 அரசு பஸ்கள் மீதும் மர்மநபர்கள் கற்களை வீசினர். இதில் அந்த 2 பஸ்களின் முன்பக்க கண்ணாடியும் உடைந்தது. இதுகுறித்து 3 பஸ்களின் டிரைவர்களும் எலவனாசூர்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ்களின் கண்ணாடிகளை உடைத்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

அடுத்தடுத்து பஸ்களின் கண்ணாடிகளை மர்மநபர்கள் உடைத்த சம்பவம் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com