கர்நாடக சட்டசபையை கலைத்து விட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் எடியூரப்பா வலியுறுத்தல்

காங்கிரஸ் மேலிடத்துக்கு மந்திரிகள் பணம் வழங்கியது நிரூபணமாகி உள்ளதால் சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என்று எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடக சட்டசபையை கலைத்து விட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் எடியூரப்பா வலியுறுத்தல்
Published on

பெங்களூரு,

காங்கிரஸ் மேலிடத்துக்கு மந்திரிகள் பணம் வழங்கியது நிரூபணமாகி உள்ளதால் கர்நாடக சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடக மாநில பா.ஜனதா தலைவரும், முன்னாள் முதல்மந்திரியுமான எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

காங்கிரஸ் மேலிடத்துக்கு சித்தராமையா மற்றும் மந்திரிகள் பணம் கொடுத்துள்ளனர் என்று நான் கூறினேன். இது பொய்யான குற்றச்சாட்டு என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறினர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோவிந்தராஜ் எம்.எல்.சி. வீட்டில் கிடைத்த குறிப்பேடு(டைரி) தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன.

இவை நான் கூறிய குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் ஆகும். காங்கிரஸ் அரசின் ஊழல் வெட்டவெளிச்சமாகிவிட்டது. குறிப்பேட்டில் பெரும்பாலான மந்திரிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் சித்தராமையா, மந்திரிகள் காங்கிரஸ் மேலிடத்திற்கு பணம் கொடுத்தது நிரூபணமாகி உள்ளது. அதனால் சித்தராமையா உடனடியாக கர்நாடக சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும். காங்கிரஸ் மேலிடத்துக்கு மந்திரிகள் கொடுத்த பணம் மற்றும் அவர்கள் செய்த ஊழல் மக்களுக்கு தெரிந்துவிட்டது.

காங்கிரஸ் மேலிடத்துக்கு பணம் கொடுத்ததாக நான் கூறிய குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் இருந்தால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக சித்தராமையா கூறினார். இப்போது அவற்றுக்கு ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. எனவே, சித்தராமையா அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும். காங்கிரஸ் அரசின் ஊழல்களை நாங்கள் மக்களின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்.

ஊழல் இல்லாத, பாகுபாடு இல்லாத ஆட்சியை நடத்துவதாக கூறிய சித்தராமையாவின் ஆட்சி நிர்வாகத்தின் உண்மையான முகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. காங்கிரஸ் மேலிடத்துக்கு பணம் கொடுத்த விவகாரத்திற்கு அக்கட்சியினர் என்ன சொல்கிறார்கள்?. ஊழல் இல்லாத ஆட்சியை நடத்தினால் மந்திரிகளுக்கு கருப்பு பணம் எங்கிருந்து வந்தது?. என்ன காரணத்திற்காக கட்சி மேலிடத்திற்கு பணம் கொடுத்தனர் என்பதற்கு மக்களுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

சித்தராமையா தனது பதவியை காப்பாற்றிக்கொள்ள காங்கிரஸ் மேலிடத்துக்கு பணம் கொடுத்துள்ளார் என்று நான் கூறினேன். அப்போது என்னை காங்கிரசார் வாய்க்கு வந்தபடி பேசினர். என்னை மனநோயாளி, நிமான்ஸ் மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்று கூறினர். இப்போது நீங்கள்(காங்கிரசார்) எந்த மருத்துவமனைக்கு போகிறீர்கள் என்பதை சொல்லுங்கள்.

நான் ஊழல் செய்திருந்தால் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று சித்தராமையா சொன்னார். ஆனால் சித்தராமையா இப்போது மவுனமாக இருப்பது ஏன்?. அவருடைய மவுனத்தை பார்த்தால், அவர் ஊழல் செய்துள்ளார் என்பது தெரிகிறது. சித்தராமையா இனியும் காலம் தாழ்த்தாமல் உடனே பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

அடுத்த சட்டமன்ற தேர்தலில் இந்த குறிப்பேட்டு விவரங்களை முக்கிய விஷயமாக முன்வைத்து தேர்தலை சந்திப்போம். சித்தராமையா தனது அதிகாரத்தை காப்பாற்றிக்கொள்ள இன்னும் என்னென்ன தவறு செய்துள்ளார் என்பதை உரிய ஆவணங்களுடன் பகிரங்கப்படுத்துவேன். பெங்களூரு மாநகராட்சியில் ரூ.3,500 கோடியை காங்கிரசார் ஊழல் செய்துள்ளனர்.

இதற்கும் ஆதாரங்களை விரைவில் வெளியிடுவேன். இந்த அரசின் ஊழல்களை ஒவ்வொன்றாக வெளிப்படுத்துவேன். இந்த காங்கிரஸ் அரசின் ஊழல்களை கண்டித்து வரும் நாட்களில் பா.ஜனதா போராட்டம் நடத்தும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com