

ராமநாதபுரம்
கடலாடி அருகே உள்ள கீழச்செல்வனூர் அருந்ததியர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் கேசவன். இவரது மனைவி மாரியம்மாள் (வயது 28). 2 குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் மாரியம்மாளுக்கும், முதுகுளத்தூர் அருந்ததியர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சண்முகம் (38) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்த பழக்கத்தின் காரணமாக சண்முகம், மாரியம்மாளை தனியாக குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். இதற்கு மாரியம்மாள் மறுத்த நிலையில் ஆத்திரமடைந்த சண்முகம் கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ந் தேதி அரிவாளால் மாரியம்மாளை வெட்டி கொலை செய்தார். இதுதொடர்பாக கீழச்செல்வனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகத்தை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் விரைவு மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி சுபத்திரா, கூலித்தொழிலாளி சண்முகத்திற்கு ஆயுள் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் அதனை கட்ட தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் கொலை செய்யப்பட்ட மாரியம்மாளின் குழந்தைகளுக்கு அரசின் உதவி கிடைக்க இலவச சட்ட உதவி மையம் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கீதா ஆஜரானார்.