ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியவர்களிடம் கோழி முட்டையை கொடுத்து போலீசார் நூதன பிரசாரம்

மேலூரில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியவர்களிடம் முட்டை கொடுத்து போக்குவரத்து போலீசார் நூதன முறையில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.
ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியவர்களிடம் கோழி முட்டையை கொடுத்து போலீசார் நூதன பிரசாரம்
Published on

மேலூர்,

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சீட் பெல்ட் அணியாமல் அரசு பஸ்சை ஓட்டியதாக டிரைவருக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே மதுரை மாவட்டம் மேலூரில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியவர்களுக்கு போக்குவரத்து போலீசார் கோழி முட்டையை கொடுத்து நூதன முறையில் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

மேலூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாகீர்உசேன் தலைமையிலான போலீசார் நேற்று மேலூர் பஸ் நிலையம் முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஹெல்மெட் அணிந்து வரும் இருசக்கர வாகன ஓட்டிகளை பாராட்டும் விதமாக அவர்களுக்கு மாலை அணிவித்து பாராட்டினர். அதேசமயம் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டி வந்தவர்களிடம் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

குறிப்பாக ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் அனைவரையும் ஒன்றாக நிற்கவைத்து அவர்களின் கைகளில் தலா ஒரு கோழி முட்டையை கொடுத்து, போக்குவரத்து போலீசார் நூதன விழிப்புணர்வு மேற்கொண்டனர். அதாவது, ஒவ்வொருவரின் தலையும் முட்டை போன்று தான் எனவும், ஹெல்மெட் அணியாமல் கீழே விழுந்தால் முட்டை தவறி விழுந்து உடைவது போன்று, வாகன ஓட்டிகளின் தலையும் உடைந்து விடும் என்றும் கூறினர். தொடர்ந்து முட்டையை உடைத்து காண்பித்து, ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களையும் கீழே முட்டையை போடுமாறு இன்ஸ்பெக்டர் ஜாகீர்உசேன் அறிவுறுத்தினார். இதையடுத்து இனிமேல் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்ட மாட்டோம் என்று கூறியதுடன், முட்டையை உடைக்காமல் வாகன ஓட்டிகள் திரும்ப போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுவதன் அவசியத்தை போக்குவரத்து போலீசார் எடுத்துரைத்தனர். போலீசாரின் இந்த நூதன பிரசாரம் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. போலீசாரை பாராட்டவும் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com