பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: என்.எல்.சி. சுரங்க பகுதியில் கலெக்டர் ஆய்வு - அதிகாரிகளை உள்ளே செல்ல அனுமதிக்காததால் பரபரப்பு

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்.எல்.சி. சுரங்க பகுதியில் கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது அவருடன் சென்ற மற்ற அதிகாரிகளை உள்ளே அனுமதிக்காததால் பரபரப்பு ஏற்பட்டது.
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: என்.எல்.சி. சுரங்க பகுதியில் கலெக்டர் ஆய்வு - அதிகாரிகளை உள்ளே செல்ல அனுமதிக்காததால் பரபரப்பு
Published on

மந்தாரக்குப்பம்,

கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி, நேற்று மந்தாரக்குப்பம் அடுத்த பெரியாக்குறிச்சி பஸ் நிலையத்துக்கு வருகை தந்தார். அங்கு கொரோனா தடுப்பு நெறிமுறைகளை அனைவரும் முறையாக கடைபிடிக்கிறார்களா?, கடைகளிலும் வியாபாரிகள் கட்டுப்பாடுகளை பின்பற்றி செயல்படுகிறார்களா? என்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள் சிலர், முககவசம் அணியாமல் வந்தனர். அவர்களை கடுமையாக எச்சரிக்கை செய்த அவர், கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், முககவசம் அணியுமாறும், தனிமனித இடைவெளியை பின்பற்றுமாறும் அறிவுறுத்தினார்.

இதனிடையே தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் அவர் ஆய்வு செய்தார். அந்த வகையில் என்.எல்.சி. 2-வது சுரங்கத்தின் வழியாக பரவானாற்றுக்கு தண்ணீர் வெளியேற்றப்படும். இதனால் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் கிராமங்களுக்குள் வெள்ள நீர் புகுந்து பாதிப்புக்கு உள்ளாகி வருவதுண்டு. எனவே இதுபோன்ற பாதிப்பை தற்போது தவிர்க்கும் பொருட்டு எடுக்க வேண்டிய நடவடிக்கையை ஆய்வு செய்வதற்காக கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி என்.எல்.சி. சுரங்க பகுதிக்கு சென்றார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் கலெக்டருடன், மாவட்ட அலுவலர்கள் சிலரை மட்டுமே உள்ளே செல்ல அனுமதித்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் அவர்களது வாகனத்தில் உள்ளே சென்றனர்.

அதன்பின்னர் வேறு வாகனத்தில் வந்த கம்மாபுரம் வருவாய் ஆய்வாளர், கிராம உதவி ஆய்வாளர், காவல்துறையினர் என்று சில அதிகாரிகளை உள்ளே விட அனுமதிக்கவில்லை. இதனால் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கும், அரசு அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே சுரங்க பகுதிக்கு சென்ற கலெக்டர் மற்றும் அதிகாரிகள் ஆய்வை முடித்துக்கொண்டு அங்கிருந்து திரும்பி வந்தனர். அப்போது வடக்கு வெள்ளூர் ஊராட்சிக்கு உட்பட்ட மூப்பன் ஏரி தூர்வாரப்படுமா என்று கலெக்டர் சந்திரசேகர் சாகமூரியிடம் கேட்ட போது, உடனடியாக இந்த ஏரியின் விவரத்தை கேட்டறிந்து தூர்வார நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார். முன்னதாக மத்திய தொழிலக பாதுகாப்பு படைவீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிகாரிகளும் சமாதானம் அடைந்து கலெக்டருடன் திரும்பி சென்றுவிட்டனர்.

தொடர்ந்து மழைக்காலத்தில் என்.எல்.சி. 2-வது சுரங்க மண்ணால் பாதிக்கப்பட்டு வரும் கொம்பாடிகுப்பம், பொன்னாலகரம் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த அதிகாரிகளிடம் வரும் நாட்களில் விளைநிலங்கள் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமறு அறிவுறுத்தினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com