சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைப்பு

சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.
சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைப்பு
Published on

கடலூர்,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் இறந்த சம்பவத்தை கண்டித்தும், இவர்கள் மரணத்திற்கு காரணமான சம்பந்தப்பட்ட போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் ஆரோக்கியத்துடன் இருப்பதாக சான்றிதழ் கொடுத்த அரசு டாக்டர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், உயிரிழந்த வியாபாரிகள் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், காவல்துறையின் தாக்குதலை கண்டித்தும், உயிரிழந்த 2 பேருக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பை சேர்ந்த வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

கடைகள் அடைப்பு

அதன்படி கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, விருத்தாசலம், ராமநத்தம், திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மளிகை கடைகள், துணிக்கடைகள், ஓட்டல்கள், நகை கடைகள், செல்போன் விற்பனை கடைகள் என அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஒரு சில கடைகள் மட்டுமே திறந்திருந்தன. மேலும் தமிழ்நாடு வணிகர் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவுறுத்தலின் பேரில் குள்ளஞ்சாவடியில் அனைத்து வியாபாரிகள் சார்பில் கடையடைப்பு நடைபெற்றது.

ஆனால் கடலூர் நகரில் பெரும்பாலான கடைகள் வழக்கம் போல் திறந்திருந்தன. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒரு சில கடைகள் மட்டுமே அடைக்கப்பட்டிருந்தன.

மருந்து கடைகள் மூடல்

மேலும் கடலூரில் உள்ள மருந்து கடைகள் காலை7 மணி முதல் 11 மணி வரை அடைக்கப்பட்டு இருந்தது. இதனால் பொதுமக்கள் மருந்து வாங்க முடியாமல் கடை முன்பு காத்திருந்தனர்.

பின்னர் 11 மணிக்கு கடை திறந்தவுடன் மருந்து, மாத்திரைகளை வாங்கி சென்றனர். மாவட்டம் முழுவதும் 1200-க்கும் மேற்பட்ட மருந்து கடைகள் அடைக்கப்பட்டுள்ளதாக சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com