

மங்கலம்,
பல்லடத்தில் வேலைக்கு வந்த முதல்நாளே வடமாநில வாலிபர் அடித்து காலை செய்யப்பட்டார். அவருடைய உடலை கொலையாளிகள் காட்டில் வீசிய கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வாலிபர் காலை
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 22). இவருடைய தம்பி பிரேஜ்லால் (18). இவர்கள் வேலை தேடி உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து ரெயில் மூலம் நேற்று முன்தினம் காலை திருப்பூர் வந்தனர். பின்னர் இவர்கள் இருவரும் பனியன் நிறுவனங்களுக்கு வேலைக்கு ஆட்கள் அனுப்பும் பல்லடம் பஸ் நிலையம் பகுதியில் செயல்படும் ஒரு ஏஜென்சியை தொடர்பு கொண்டு பேசினர்.
இதையடுத்து அந்த அலுவலகத்தில் இருந்து இவர்களை அழைத்து செல்ல வேன் ஒன்றை அனுப்பினர். அந்த வேனில் 2 பேரும் பல்லடம் வந்தனர். பின்னர் இரவில் அந்த அலுவலகத்தில் இருவரும் தங்கினர். அப்போது அலுவலகத்தில் இருந்த 4 பேர், ராஜ்குமாரையும், பிரேஜ்லாலையும் ஒரு பனியன் நிறுவனத்தில் மறுநாளே (நேற்று) வேலைக்கு சேர வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் சகோதரர்கள் இருவரும் உத்தரபிரதேசத்தில் இருந்து ரெயிலில் வந்ததால் உடல் களைப்பாக உள்ளதாகவும், இதனால் 2 நாட்கள் கழித்து வேலைக்கு செல்வதாகவும் கூறினர். ஆனால் இதற்கு வேலைக்கு ஆட்கள் அனுப்பும் ஏஜென்சியினர் சம்மதிக்கவில்லை என்றும், 8-ந் தேதியே பணியில் சேர வேண்டும் என்றும் கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ராஜ்குமாரும், பிரேஜ்லாலும் அலுவலக அறையில் இருக்கும்போது நள்ளிரவு 4 பேர் அங்கு வந்து அவர்களை கடுமையாக அடித்து தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த இருவரும் மயக்கம் அடைந்தனர். இதையடுத்து அந்த கும்பல் இவர்கள் 2 பேரையும் ஒரு வேனில் ஏற்றி, நேற்று அதிகாலை 1 மணிக்கு சின்னகாளிபாளையம் செல்லும் காட்டில் தள்ளி விட்டு சென்றனர்.
போலீசார் விசாரணை
அதிகாலை வரை காட்டுப்பகுதியில் கிடந்த பிரேஜ்லால் மயக்கம் தெளிந்து தனது அண்ணனை பார்த்துள்ளார். அப்போது அவர் இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்தவர்களிடம் போலீஸ் நிலையம் எங்கு உள்ளது என்று விசாரித்து மங்கலம் போலீஸ் நிலையம் சென்று தகவல் கூறினார். உடனே சம்பவ இடத்திற்கு பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றிச்செல்வன், இன்ஸ்பெக்டர் ராஜவேல் ஆகியோர் சென்று அங்கு பிணமாக கிடந்த ராஜ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த பிரேஜ்லாலை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பிரேஜ்லாலிடம் விசாரணை செய்தனர். அவர் கூறிய தகவல்களை கொண்டு கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள். உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து திருப்பூருக்கு வேலைக்கு வந்த முதல்நாளே தம்பி கண் முன்னே வாலிபர் அடித்து செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.