டி.கல்லுப்பட்டி அருகே, மண் சரிவில் சிக்கி தொழிலாளி பலி

டி.கல்லுப்பட்டி அருகே மண் சரிவில் சிக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்துபோனார்.
டி.கல்லுப்பட்டி அருகே, மண் சரிவில் சிக்கி தொழிலாளி பலி
Published on

பேரையூர்,

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ளது எம்.சுப்புலாபுரம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சண்முகநாதன் (வயது 48). கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த சில தினங்களாக, டி.கல்லுப்பட்டி அருகே உள்ள காடனேரி பகுதியில் புதிய பெட்ரோல் பங்க் அமைக்கும் பணியில் சக தொழிலாளர்களுடன் இவர் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்றும் அங்கு பணி செய்து கொண்டிருந்தார். அப்போது, கிணறு தோண்டி அதில் புதிய பெட்ரோல் டேங்க் அமைக்கும் பணி நடந்தது. அதில் சண்முகநாதன் வேலை செய்து கொண்டிருக்கும்போது மண் சரிந்து அவர் மீது விழுந்தது. மண் குவியலில் சிக்கிய அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து சக தொழிலாளர்கள் அவரை தூக்கியபோது, அவர் மூச்சு திணறி இறந்துபோனது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக டி.கல்லுப்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், சண்முகநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com