

தேனி,
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தேனி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சென்னையை சேர்ந்த மாணவர் உதித்சூர்யா, அவருடைய தந்தை டாக்டர் வெங்கடேசன் மற்றும் 4 மாணவர்கள், இடைத்தரகர்கள் 3 பேர் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் முக்கிய இடைத்தரகராக கேரள மாநிலத்தை சேர்ந்த ரஷீத் என்பவர் செயல்பட்டார். இதையடுத்து. கடந்த 1 ஆண்டாக ரஷீத்தை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்தநிலையில் ரஷீத் தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று முன்தினம் சரண் அடைந்தார். பின்னர் அவர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் பெரியகுளம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே ரஷீத்தை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தரப்பில் தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மாஜிஸ்திரேட்டு பன்னீர்செல்வம் முன்னிலையில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கில் முக்கிய நபராக ரஷீத் கருதப்படுவதால் அவரை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி அளிக்குமாறு சி.பி.சி.ஐ.டி. தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து மாஜிஸ்திரேட்டு பன்னீர்செல்வம், வழக்கு தொடர்பாக ரஷீத்தை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தும், வருகிற 11-ந்தேதி அவரை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து ரஷீத் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர். கோர்ட்டு அனுமதியின்பேரில் ரஷீத்தை அங்கிருந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். அவர் தேனி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரை விசாரணைக்காக மதுரை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு போலீசார் கொண்டு சென்றனர்.
ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு தேர்வு எழுதியவர்கள் யார்? இந்த ஆள்மாறாட்டத்தில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? ஆள்மாறாட்டத்துக்காக யாருக்கெல்லாம் எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது? என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு ரஷீத்திடம் நடத்தும் விசாரணையில் பதில் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது.