கைத்தறி நெசவாளர்களுக்கு புதிய நல்வாழ்வு காப்பீட்டு திட்டங்கள்

ராமநாதபுரம் மாவட்ட கைத்தறி நெசவாளர்கள் புதிய நல்வாழ்வு காப்பீட்டு திட்டங்களில் சேர்ந்து பயன்பெறலாம் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
கைத்தறி நெசவாளர்களுக்கு புதிய நல்வாழ்வு காப்பீட்டு திட்டங்கள்
Published on

பரமக்குடி,

பரமக்குடியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குனர் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:- கைத்தறி நெசவாளர்களுக்காக புதிய நல்வாழ்வு காப்பீட்டு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இதன்படி மகாத்மா காந்தி புங்கர் பீமா யோஜனா என்ற காப்பீட்டு திட்டத்தை மத்தியஅரசு , மாநில அரசு மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்துடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது.

கைத்தறி நெசவாளர்களுக்கு ஏற்படும் இயற்கை மரணம், விபத்து மரணம் அல்லது விபத்தினால் நிரந்தர, பகுதி ஊனம் போன்றவற்றுக்கு காப்பீடு தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் கூட்டுறவு அமைப்பில் உள்ள கைத்தறி நெசவாளர்கள், கூட்டுறவு அமைப்பு சாரா கைத்தறி நெசவாளர்கள், உபதொழில் செய்பவர்களும் சேர்ந்து பயன்பெறலாம்.

இந்த திட்டத்துடன் தற்போது மத்திய அரசு புதிதாக பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா மற்றும் பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா ஆகிய காப்பீட்டு திட்டங்களை நடைமுறைப்படுத்தி உள்ளது.

இந்த புதிய திட்டத்தின் கீழ் 18 வயது முதல் 50 வயது வரை உள்ள நெசவாளர்கள் இறந்தால் ரூ. 2 லட்சம், நிரந்த ஊனம் அடைந்தால் ரூ. 2 லட்சம், பகுதி ஊனம் அடைந்தால் ரூ.1 லட்சம் காப்பீட்டு தொகையாக வழங்கப்படுகிறது. 50 வயது முதல் 59 வரை உள்ளவர்களுக்கு ஆயுள் காப்பீட்டு தொகை ரூ. 60 ஆயிரம் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்திற்கு கைத்தறி நெசவாளர்கள் தொகை எதுவும் செலுத்த வேண்டியதில்லை. இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெற தகுதியுடைய ராமநாதபுரம் மாவட்ட கைத்தறி நெசவாளர்கள், கைத்தறி உபதொழில் செய்பவர்கள் புகைப்படம், வங்கி கணக்கு, ஆதார் அட்டையை வங்கி கணக்குடன் இணைத்த விவரம் மற்றும் நெசவாளர் என்பதற்கான சான்றுடன் பரமக்குடியில் உள்ள கைத்தறி மற்றும் துணிநூல்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com