

அரியலூர்:
அரசு பஸ்கள் ஓடவில்லை
நாடு முழுவதும் தொழிற்சங்கத்தினர், பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிறுவனங்களை தனியார்மயமாக்கும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கினர். இதன்படி அரியலூர் நகரில் ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யூ.சி., எச்.எம்.எஸ். உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டன. அரியலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து 10 பஸ்கள் மட்டும் ஓடின. 70-க்கும் மேற்பட்ட பஸ்கள் ஓடவில்லை. அரசு டவுன் பஸ்கள் ஓடாததால் ஏராளமான பெண் பயணிகள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டனர். கிராமத்தில் இருந்து வேலைக்கு வருபவர்கள் மினி வேன்களில் வந்தனர். தனியார் பஸ்களில் கூட்டம் இரண்டு மடங்காக இருந்தது. நகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் வாடிக்கையாளர்கள் வழக்கம்போல் வந்து பணப்பரிவர்த்தனை செய்தனர். மேலும் சில வங்கிகள் இயங்கின. ஆட்டோக்கள், லாரிகள், ரெயில்கள் வழக்கம்போல் ஓடின. தனியார் சிமெண்டு ஆலைகள் இயங்கின.
அரியலூர் தலைமை தபால் நிலையம் முன்பு தொழிற்சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு என்.எப்.பி.இ. செயல் தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ராமலிங்கம் முன்னிலை வகித்தார். உதவி செயலாளர்கள் ரவிச்சந்திரன், அன்பரசன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஏ.ஜி.டி.எஸ்.யு. தலைவர் கோபாலகிருஷ்ணன், கோட்ட செயலாளர் மருதமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் உள்ள 90 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. தனியார் பஸ்கள் வழக்கம்போல் இயங்கின. பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடாமல் நிறுத்தப்பட்டதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஜெயங்கொண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் 92 பஸ்கள், 475 டிரைவர், கண்டக்டர்கள் உள்ள நிலையில் 2 டவுன் பஸ்கள், 15 புறநகர் பஸ்கள் என 17 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. 70-க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் பஸ்கள் குறைவாக இயக்கப்படுவதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள், பொதுமக்கள் என பலரும் சிரமத்திற்குள்ளாகினர்.
உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், ஜெயங்கொண்டம் தாசில்தார் ஆனந்தன், ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) ராஜன் ஆகியோர் அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு சென்று அங்கிருந்த திருச்சி கோட்ட மேலாளர் கார்த்திகேயன், பணிமனை கிளை மேலாளர் ராம்குமாரிடம் ஆகியோரிடம் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் செல்லும் வகையில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
154 பேர் கைது
மேலும் ஜெயங்கொண்டம் தபால் அலுவலகம் முன்பு மத்திய அரசை கண்டித்து தொ.மு.ச., சி.ஐ.டி.யு, ஏ.ஏ.எல்.எப், எல்.பி.எப், ஹெச்.எம்.எஸ். உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் கைத்தறி நெசவுத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ் மற்றும் தமிழ்நாடு மின்வாரிய ஊழியர் மத்திய அமைப்பு கோட்ட செயலாளர் கண்ணன் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் இளங்கோவன் தொடங்கி வைத்தார். இதில் நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து ஜெயங்கொண்டம் தபால் அலுவலகம் அருகே நான்கு ரோட்டில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் என 16 பெண்கள் உள்பட 154 பேர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டனர். ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு(பொறுப்பு) ராஜன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
விக்கிரமங்கலம், தா.பழூர்
விக்கிரமங்கலத்தில் உள்ள துணை தபால் அலுவலகம் மற்றும் அதனைச் சார்ந்த 13 கிராம கிளை தபால் அலுவலகங்களில் பணிபுரியும் 30-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் அந்த தபால் அலுவலங்கள் பூட்டப்பட்டிருந்தன. விக்கிரமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் அரியலூரில் இருந்து விக்கிரமங்கலம் வழியாக முத்துவாஞ்சேரி மற்றும் ஸ்ரீபுரந்தான் பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் இயங்கவில்லை. தனியார் பஸ்கள் மட்டுமே இயங்கின. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் தினமும் பஸ்சில் பயணிக்கும் பொதுமக்கள் ஆகியோர் மிகவும் பாதிப்படைந்தனர்.
தா.பழூர் பகுதியில் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகள், ஒன்றிய அலுவலகம், பதிவுத் துறை அலுவலகம், கல்வித்துறை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுத்துறை வங்கிகளில் சேவை முற்றிலும் முடங்கியது. பல்வேறு அலுவலகங்களில் அரசு அலுவலர்கள் வேலை நிறுத்தம் செய்ததால் பணிகள் முடங்கியது. போக்குவரத்து துறை சார்பில் ஜெயங்கொண்டம் பணிமனை, கும்பகோணம் பணிமனைகளில் இருந்து பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கு பயணம் செய்ய உரிய நேரத்தில் பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் மற்ற நேரங்களில் பஸ் போக்குவரத்து குறைவாகவே காணப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.